FKart PrmotionalBanners

“உணவே மருந்து, மருந்தே உணவு”

“உணவே மருந்து,
மருந்தே உணவு”

என்ற சித்தர்களின் கூற்றை கடைப்பிடித்தாலே நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம்.

நம் முன்னோர்கள் தாங்கள் மேற்கொண்ட உணவு பழக்கங்களின் மூலம் எந்தவகையான நோயின் தாக்குதலுமின்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.

இன்றைய நிலையை சற்று எண்ணிப் பார்ப்போமானால்,

10 நபரில் 4 பேர் நீரிழிவு நோயின் தாக்குதலுக்கு ஆளானவராகவும், 3 பேர் இருதய சம்பந்தப்பட்ட நோயாளியாகவும், மீதம் 3 பேர் ஏதேனும் வேறு நோயின் தாக்குதலுக்கு ஆளானவராகவும் இருப்பார்கள்.

நம் மக்கள் தொகையில் 50 வயதுக்குமேல் உள்ளவர்களில் எந்த நோயும் இல்லாமல் இருப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

இன்று மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை என்பது மிகவும் சாதாரணமான விஷயமாகிவிட்டது. நகரங்களில் 10 அடிக்கு ஒரு மருந்தகம்.

இதில் இன்னும் கொடுமையான விஷயம், நோயை சரிசெய்துகொள்ள மருத்துவமனைக்குச் சென்றால், அங்கு காலாவதியான மருந்துகள், போலி மருந்துகள், என கள்ளச்சந்தை பொருட்கள் நோயாளிகளின் உயிர்களை பறிக்கின்றன.

இதற்கெல்லாம் மூலகாரணம் யாரென்று சிந்திப்போமேயானால் கண்டிப்பாக அது நாம்தான்..

உடலை சீராக பேணுவதை தவிர்த்து பொருள் தேடும் நோக்கில் தன்னை மறந்து அலைந்ததன் விளைவுதான் இது..

இடையிடையே களைப்பு ஏற்பட்டால், செயற்கை குளிர்பானங்கள், அவசரகதி உணவு வகைகள், பதப்படுத்தப்பட்ட பொருட்கள் என கண்டவற்றையும் வாங்கி உண்கிறோம். மனதையும் உடலையும் ரிலாக்ஸ் செய்கிறோம் என்ற பெயரில் மது, புகை போதை வஸ்து என ஆரம்பித்து அதற்கு அடிமையாகிறோம்.

இப்படியாக நோய்களை நாம் காசுகொடுத்து வாங்கி, உடலையும் நோயையும் இணைபிரியா நண்பர்களாக்கி நமக்குள் வளர்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் நம் முன்னோர்களின் உணவு பெரும்பாலும் இயற்கையைச் சார்ந்தே இருந்து வந்தது. உதாரணமாக அரிசியை எடுத்துக் கொண்டால் கைக்குத்தல் அரிசி, அதாவது உமி நீக்கி தவிடு நீக்கப்படாத அரிசி. இந்த தவிடு நீக்கப்படாத அரிசியில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் வைட்டமின் பி1 நிறைந்துள்ளது. இது இருதயத்திற்கும், நரம்பு மண்டலத்திற்கும் ஊட்டமளிக்கக்கூடியது.

மேலும் தானிய வகைகள், இயற்கையாய் விளையும் காய்கறிகள் என உண்டுவந்துள்ளனர். அதனால் அவர்கள் நோயின்றி வாழ்ந்தனர்.

ஆனால் இன்று அனைவருமே வெள்ளை வெளேரென்று பூப்போன்ற சாப்பாட்டைத்தான் விரும்புகின்றனர். நாகரீகம் என்ற பெயரிலும், அந்நிய பொருள் மோகத்திலும் இயற்கையை மறந்து செயற்கையையே உண்மையென நம்பி அதற்குள் ஊறிவிட்டனர்.

இந்த நிலை மாறுவதென்பது சற்று சிரமம்தான். இருப்பினும் அதோடு, உடலுக்கு நன்மை பயக்கும் காய்கறிகள், கனிகள், தானியங்களை உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் தொந்தரவுகள் மேலும் அதிகமாகாமல் பார்த்துக்கொள்ளலாம்.

அவற்றில் சிலவற்றை பார்ப்போம்

வாழைப்பூ

இதில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி,சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இரத்தச் சோகையை வராமல் தடுத்து உடலுக்கு தெம்பையும் புத்துணர்வையும் தரவல்லது.

வாழைத்தண்டு

இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி நிறைந்துள்ளது. இரத்தத்தை சுத்தப்படுத்தும். இரத்தத்தில் உள்ள தேவையற்ற அசுத்த நீரை பிரித்தெடுக்கும். சிறுநீரகத்தின் செயல்பாடுகளை சீராக்கி சிறுநீரக கல் அடைப்பை தடுக்கும்.

வாழைக்காய்

இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி, சத்துக்கள் அதிகம் உள்ளது. வாயுவைத் தூண்டும் குணமுள்ளதால் இதை சமைக்கும்போது அதிகளவில் பூண்டு சேர்த்துக்கொள்வது நல்லது. மலச்சிக்கல் தீர்க்கும்.

பாகற்காய்

வைட்டமின் ஏ, பி,சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. நன்கு பசியைத் தூண்டும். உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.

சேப்பங்கிழங்கு

கால்சியம், பாஸ்பரஸ் அதிகம் நிறைந்துள்ளது. இவை எலும்புகளையும், பற்களையும் உறுதிப்படுத்தும்.

பீட்ரூட்

கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. மலச்சிக்கலைப் போக்கும், இரத்த சோகையை சரிபடுத்தும்.

வெண்டைக்காய்

போலிக் அமிலம், கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளன. மூளை வளர்ச்சியைத் தூண்டும். நன்கு பசியை உண்டாக்கும். மலச்சிக்கலைப் போக்கும்.

கோவைக்காய்

வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் நிறைந்தள்ளன. வயிற்றுப்புண், வாய்ப்புண், மூல நோயின் தாக்குதல் போன்றவற்றை நீக்கும்.

முருங்கைக் காய்

வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. பெண்களுக்கு மாதவிலக்கின்போது உண்டாகும் அதிக உதிரப்போக்கைத் தடுக்கும். விந்து உற்பத்தியைப் பெருக்கும்.

சுண்டைக்காய்

புரதம், கால்சியம், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது. உணவில் சுண்டைக்காய் சேர்த்து வந்தால் வயிற்றுப் புழுக்களை கொல்லும். உடல் வளர்ச்சியைத் தூண்டும்.

சுரைக்காய்

புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, நிறைந்துள்ளது. இவை உடல் சோர்வை நீக்கி, உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

குடைமிளகாய்

வைட்டமின் ஏ, பி,சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது. அஜீரணக் கோளாறை நீக்கி செரிமான சக்தியை தூண்டும்.

சவ்சவ்

கால்சியம், வைட்டமின் சி, சத்துக்கள் உள்ளன. எலும்பு, பற்களுக்கு உறுதியைக் கொடுக்கும்.

அவரைக்காய்

புரதம், நார்ச்சத்து மிகுந்துள்ளது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தேகத்தை பலப்படுத்துகிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது.

காரட்

உடலுக்கு உறுதியைக் கொடுக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

கொத்தவரங்காய்

இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி நிறைந்துள்ளது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும். இரத்தத்தை சுத்தப் படுத்தும்.

கத்தரி பிஞ்சு

கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. செரிமான சக்தியை தூண்டி நன்கு பசியை உண்டாக்கும்.

உடலுக்கு சத்தான உணவையும் அதோடு மருத்துவத்தையும் கலந்து கொடுக்கும் கீரைகள், பழங்கள், பயறு வகைகள் பற்றி வரும் இதழில் விரிவாக அறிவோம்.

Comments