FKart PrmotionalBanners

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது!

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது!
Stay connected to temple.dinamalar.com

விண்வெளியில் சந்திரனுக்கும் சுக்கிரனுக்கும் இடையே அமைந்துள்ளது, புதனின் பயணப்பாதை. ராசிச் சக்கரத்தில், சூரியனுக்கும் சந்திரனுக்கும் பின்வீட்டில் தென்படுவான், புதன் பகவான். மிதுனமும் கன்னியும் அவன் இருக்கும் இடங்கள், கன்னியில் உச்சம் பெற்றிருப்பதால், அவனது பலம் வலுத்திருக்கும். மிதுனம் என்றால் இருவர்; அதாவது... இணைந்த இருவர் என்று பொருள் உண்டு. நாகரிக மனித இனத்தின் வெளிப்பாடு, மிதுனம். அது முதிர்ச்சி அடைந்த நிலையைச் சுட்டிக்காட்டுவதே கன்னி. ஓடத்தில், கன்யகை கையில் பயிருடன் தென்படும் இயல்பு கன்னிக்கு உண்டு. சூரியனுடனும் (ஆன்மா) சந்திரனுடனும் (மனம்) சேர்ந்து காணப்படுவான், புதன். ராசிக் சக்கரத்தில் சூரியனுடன் இணையும் வேளையில், நிபுண யோகத்தைத் தரவல்லவன். புதன். எதிர்பாராத சிக்கலில் சிக்கிக்கொண்டாலும், எளிதில் வருவதற்கான சிந்தனையை, புத்திசாலித்தனத்தை அளிப்பான். புதன் என்றால், அறிதல், உள்வாங்கி உணர்தல் என்ற அர்த்தம் உண்டு (புத அவகமனே). உடலையும் உள்ளத்தையும் இணைப்பதில் புதனுக்குப் பங்கு உண்டு. ஆன்மிகத்தையும் உலகவியலையும் இணைக்கிற பாலமாகச் செயல்படுவான் புதன். மனம் நினைத்ததை புத்தி ஆராயும். அந்த வேலையை இறுதி செய்வதற்குப் புதன் தேவை. சந்திரனின் (மனம்) மைந்தனாக புதனைச் சித்திரிக்கிற தகவல், புராணத்தில் உண்டு. அதாவது, சந்திரனிலிருந்து வெளியானவன் புதன். மனத்தின் எண்ண ஓட்டத்துடன் நெருங்கிய தொடர்பு, புதனுக்கு இருப்பதையே இது உணர்த்துகிறது. புதன் என்றால், அறிஞர் என்கிற அர்த்தமும் உண்டு. உடலில் அணு அளவில் உள்ள மனம், புதனின் ஒத்துழைப்பில், தன்னுடைய எண்ணங்களை விரிவாக்கி, செயல்படுத்தி வெற்றிக்கு வழி வகுக்கிறது. சிந்தனை வளத்துக்கான அடித்தளம், புத்தி; அது, புதனுடன் இணைந்தே இருக்கும். நாகரிகமான சிந்தனையைத் தூண்டுபவனும், முதிர்ச்சி அடைந்த செயல்பாட்டுக்கு உரியவனும் புதனே ! அவன் வலுவிழந்தால், பாமரனாகச் செயல்படுவான்; வலுவுற்றால், அறிஞனாக விளங்குவான். கல்வியை முழுமையாகப் பெறுவதற்கு, புதனின் துணை அவசியம். வாழ்வின் வெற்றிக்கு ஆதாரமான அறிவு வளர்ச்சிக்கு, புதனின் பங்கு வலுப்பெற்றிருக்க வேண்டும். உலக சுகத்தை அடைவதற்குப் பணம் வேண்டும்; அதனை ஈட்டுவதற்கு உயரிய கல்வி வேண்டும்; அதனைப் பெறுவதற்கு, புதனின் ஒத்துழைப்பு தேவை. உயர்கல்வியானது பணத்தை மட்டுமே அளிக்கும். குறிப்பாக, இன்றைய சூழலில், உலக வாழ்வின் சுகத்தை அடைவதற்குப் பணத்தை ஈட்டித் தருமே தவிர, அறிவின் முதிர்ச்சியை அளிக்காது. ஆகவே, படிக்காத மேதைகள் தோன்றுவதற்கு புதனே காரணமாகிறான் !

இன்றைய கல்வியறிவு, பெரும்பாலும் தொழிலுடன் இணைந்து பணம் ஈட்டுகிற கருவியாகவே மாறிவிட்டது. அதை அளிப்பது மட்டுமின்றி, அறிவையும் அளிப்பவன், புதன் ! பேரறிவை, பெருஞானத்தை அடைவதற்கு, துறவறம் ஏற்பவர்களுக்கு புதனின் உறுதுணை அவசியம். அவனுக்கு ஸெளம்யன் என்ற பெயர் உண்டு. ஸோமன் என்றால் சந்திரன். அவனுடைய மைந்தன் என்றும் இதற்கு அர்த்தம் சொல்வர். பொதுவாக, மற்ற கிரகங்கள் யாவும் ஏனைய உடல் உறுப்புக்களுடன் தொடர்பு கொண்டிருக்கும். புதன் மட்டும், சந்திரனுடன் (மனம்) நெருங்கிய தொடர்பில் இருப்பவன் ! சூரியன், சந்திரன் ஆகிய இருவரது தொடர்பில் பலம் பெற்று, பிற கிரகங்கள் செயல்படுகின்றன. மற்ற ஐந்து கிரகங்களும் நட்சத்திர கிரகங்கள். அவற்றை, தாராகிரகங்கள் என்கிறது ஜோதிடம். ஆன்மாவாகிய சூரியனும், மனமாகிய சந்திரனும் வலுவாக இல்லையெனில், மற்ற கிரகங்கள் செயலற்றுவிடும்; புலன்கள் வேலைசெய்யாமல் நிலைத்துவிடும். எனவே சூரிய சந்திரருக்கு, ஜோதிர்கிரகம் எனும் அந்தஸ்து உண்டு. மனமானது நினைக்க வல்லது; புத்தி ஆராய வல்லது; அத்துடன், அதற்குத் தகுந்தபடி உத்தரவிடவும் செய்யும்; புலன்கள் அதன்படி செயல்படும், புதனுடன், வளர்பிறை சந்திரன், சுக்கிரன், குரு ஆகியோர் இணைந்தால், சிந்தனை வளம் பெருகும்; சிந்தனையில் தடங்கல் இருக்காது; வெற்றியும் மகிழ்ச்சியும் தேடி வரும். சனி, செவ்வாய், ராகு - கேது ஆகியோர் இணைந்தால், தனது வலிமையை இழப்பான் புதன்; தவறான சிந்தனைகளால், சங்கடத்தைச் சந்திக்கச் செய்வான். சூரியனுடன் நெருக்கமாக இருப்பின், நிபுண யோகத்தை அளிப்பான். ஆனாலும், மிக நெருங்கிய நிலையில், மௌட்யம் பெற்று, அதாவது செயல்படும் தகுதியை இழந்து, விபரீத பலனைத் தந்து விடுவான். புதன். அஸ்தமனமானால், அதாவது சூரிய ஒளியில் தென்படாமல் இருப்பின், செயல்பட மனமிருந்தும் இயலாத நிலைக்குத் தள்ளுவான். இதனால்தான், பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பர். முன்னோர், அதாவது, பொன் குவிந்திருப்பினும், அறிவ பெருகுவது அரிது ! செல்வந்தர்கள் பலருக்கு அறிவுரை வழங்க, அறிவாளிகள் தேவைப்படுவது உண்டு. பணத்தைப் பல வழிகளிலும் ஈட்டலாம்; அதனைத் தக்கவைத்துக் கொள்ள அறிவு தேவை. அதற்கு, ராசிச் சக்கரத்தில் புதன் வலுவுற்றிருக்க வேண்டும். செவ்வாயுடன் இணைந்தால், ரஜோ குணத்தின் சேர்க்கையால், சிந்தனை திசை திரும்பும் விரும்பத்தகாத விளைவுகளுக்குக் காரணமாகி விடுவான், புதன் ! சனியுடன் இணைந்திடின், மெத்தனத்துடன் இருக்கச் செய்து, அறிவிருந்தும் பாமரன்போல் செயல்பட வைப்பான். சனி, புருஷத்தன்மை கலந்த அலி; புதன், பெண்மை கலந்த அலி என அவர்களின் தரம் குறித்து விவரிக்கிறது ஜோதிடம். ஆகவே, அவர்களின் சேர்க்கை, இரண்டும் கெட்டான் பலத்தையே வழங்கும் என உறுதி செய்கிறது. அதேபோல், ராகு - கேதுவோடு இணைந்தாலும் நற்பலனை அளிக்கமாட்டான், புதன். ஏனெனில், இந்தக் கிரகங்களை நிழல்கிரகம் என்கிறது ஜோதிடம் (சாயா கிரஹ). அதாவது, இருள், அறியாமை என்று அர்த்தம். இருளில் மறைவதும், அறியாமை ஆட்கொள்வதும் செயல்பாட்டையே முடக்கிவிடும் அல்லவா ?!

புதன், சுபக்கிரகம். ஆனால், பாபக் கிரகத்துடன் இணைந்தால், பாவியாக மாறுவான் என்கிறது ஜோதிடம். அப்படித்தான், அறிவானது, துஷ்டனுடன் இணையும் போது மங்கிவிடும். நல்லவனுடன் இணைய... துளிர்விட்டு மிளிரும், ஆசை, கோபம், அறியாமை, அகங்காரம், அசூயை ஆகிய அனைத்தும் மனதில் இணைந்திருக்கும்; அன்பு, பண்பு, உண்மை, சகிப்புத்தன்மை, அடக்கம், இரக்கம் ஆகிய நற்குணங்களும் மனதுள் இருக்கும். புதன் வலுப்பெற்றால், துர்குணங்களை அடக்கி, நற்குணங்களை வளர்க்கும்; சிந்தனைத் தரத்தை உயர்த்தும்; நல்ல குடிமகனாக மாறச் செய்யும். புதன், மற்ற கிரகங்களுடன் சேராமல், மிதுனத்திலோ கன்னியிலோ வீற்றிருக்கும் வேளையில், எதிர்மறையான பலனைத் தருவான் என்கிறது ஜோதிடம். தனுர் லக்னம் அல்லது மீன லக்னம்; புதன்.. மிதுனம் அல்லது கன்னியில் வீற்றிருந்தால், கேந்திராதிபத்ய தோஷம் உண்டாகும்; இதனால் விபரீத பலனே கிடைக்கும் என்பர். தனுர் லக்னமானால், ஏழிலும் பத்திலும் இருக்கிற புதனுக்கு, கேந்திராதிபத்ய தோஷம் உண்டு. மீனமெனில், நான்கிலும் ஏழிலும் அந்தத் தோஷம் இருக்கும். நாலு கேந்திரங்கள் இருந்தாலும், 4-வது கேந்திரத்தில் இருக்கிற புதன், உலக சுகத்தால் கிடைக்கிற மகிழ்ச்சியை இழக்கச் செய்வான்; மற்ற கேந்திரங்களின் பலனை இழக்க வைக்கமாட்டான் எனும் விளக்கமும் ஜோதிடத்தில் உண்டு, புதனானவன், அறிவு வழிச் சுகத்தை அடையவும் செய்வான்; இழக்கவும் வைப்பான். காலத்தின் அளவுகோலான ஒரு வாரத்தின் நடுநாயகமாக வீற்றிருப்பவன், புதன். மனதில் படிந்த அழுக்கு மற்றும் உடலில் தென்படும் அழுக்கு ஆகியவற்றை அகற்ற, புதன்கிழமை சிறந்தது என்கிறது சாஸ்திரம். முடியும் நகமும் உடலின் கழிவுப் பொருட்கள் என்கிறது ஆயுர்வேதம். மஜ்ஜை, எலும்பு இவற்றின் கழிவுகள் என்றும் தெரிவிக்கிறது. அந்தக் கழிவுகளை அகற்றுவதற்கு, புதன் கிழமையைப் பரிந்துரைக்கிறது தர்மசாஸ்திரம். அதனால்தான், அந்தக் காலத்தில் புதன்கிழமையன்று க்ஷவரம் செய்துகொள்வார்கள். (குர்வீத் புத சோமயோ:). ஆண்கள், எண்ணெய் தேய்த்துக் குளிக்க, புதன் கிழமையையே தேர்ந்தெடுக்கும் சம்பிரதாயமும் உண்டு. எண்ணெய் தேய்த்துக் குளித்தால், உடல் அழுக்கு அகன்றுவிடும். தற்காலச் சூழலால் அது விலக்கப்பட்டாலும் அதன் பெருமை குன்றிவிடாது.

பூர்வஜென்ம வினைக்குத் தக்கபடி, பிறக்கும் வேளை அமையும். வினையின் முழு உருவத்தை ஜாதகத்தில், வீடுகளில் அமர்ந்த கிரகங்கள் விளக்கும். புதன் வலுவுடனும், மற்ற கிரகங்களின் தாக்கத்தால் வலுவிழக்காமலும் இருந்தால், அதனால் விளைகிற நற்பயன்கள் யாவும் முன் ஜென்ம புண்ணியத்தின் சேமிப்பு என அறியலாம். கிரகங்களின் கூட்டுப்பயன் தான் நடைமுறைக்கு வரும். ஆகவேதான், வீடுகளுக்கு ராசி என்றால் கூட்டம் என்று அர்த்தம், நெற் குவியலை தான்ய ராசி என்றும், பணக் குவியலை தன ராசி என்றும் சொல்வர். தனியொரு கிரகம், மற்ற கிரகங்களின் தாக்கத்தை முறியடித்துப் பலன் தராது. அவற்றுடன் இணைந்து, சிறு மாறுபாட்டுடன் தனது பலனை நடைமுறைப்படுத்தும். முற்றும் துறந்த சில துறவிகள், அறிஞர்கள், பெரியோர்களிடம் சில அல்பத்தனங்களும் தென்படும். பெருமையில் இந்தச் சிறுமை புலப்படாது. ராசி புருஷனின் நாலாம் வீட்டுக்கும் ஆறாம் வீட்டுக்கும் உடையவனாகச் சித்திரிப்பதால், மகிழ்ச்சியின் இழப்பு, எதிரியின் தாக்கம் ஆகியவை நேரிட புதன் காரணமாகிறான். வலுப்பெற்ற புதனுக்கு, குரு மற்றும் செவ்வாயின் பார்வை சேர்ந்து வரும்போது, அறிவை வளர்க்க குரு உதவினாலும், செவ்வாய் அகங்காரத்தை அளித்து, அறிவை மங்கச் செய்வதும் நிகழும். அகங்காரம் வெளிப்படுகிற அறிஞர்களும் உண்டு. விவேகம் அகங்காரத்தை அழிக்க வேண்டும். ஆனால், செயல்படாது போய்விடும். புதனை வழிபட்டால், அகங்காரம் அழியும்; அமைதி கிடைக்கும். விவேகத்தைத் தரவல்லவன் புதன் பகவான்; அவனை வழிபட, விவேகம் வளரும் ! அடக்கமும் சகிப்புத்தன்மையும் இருந்தால் வளமான வாழ்க்கை நிச்சயம், பும் புதாய நம: என்று சொல்லி புதன் பகவானது திருவிக்கிரகத்துக்கு 16 உபசாரங்களைச் செய்யுங்கள். அல்லது, அதன் அதிவேதையான ஸ்ரீமந் நாராயணனை, நமோ நாராயணாய என்று சொல்லி, புதனை வழிபடுங்கள். இன்னலை அகற்றி, இன்பத்தை வழங்குவான் ! பஞ்சபூதங்களில், பூமியின் பங்கு புதனில் உண்டு. நம் உடலிலும் பூமியின் பங்கு உண்டு. ஆகவே, பூமித் தாயில் வழிபாடு, புதன் பகவானின் வழிபாடாக மாறிவிடும். சமுத்ரவஸனே ! தேவி ! பர்வதஸ்தன மண்டிதே ! விஷ்ணு பத்னி ! நமஸ்துப்யம் பாதஸ்பர்சம்க்ஷமஸ்வமே எனும் ஸ்லோகத்தை மனதாரச் சொல்லலாம்.

ஸெளம்ய ! ஸெளம்ய குணோபேத !
புதக்ரஹ மஹாமதே !
ஆத்மானாத்ம விவேகம் மே
ஜயை த்வத்பரசாதத:

- என்று சொல்லி வணங்கி, இயற்கையில் விளைந்த பொருட்களை புதனுக்கு அர்ப்பணிக்கலாம். புதன்கிழமை நன்னாளில், இப்படி மனதாரப் பிரார்த்தியுங்கள். ஆர்வத்துடன் விஸ்தாரமான பூஜையில் இறங்கவேண்டாம்; ஆடம்பரத்தில், பூஜை மூழ்கிப் போகும்; சோர்வு ஏற்பட்டு, ஒரே நாளில் பூஜை நின்றுவிடும். என்றென்றைக்கும் நடைமுறைப்படுத்தும் அளவுக்கு வழிபட்டால், தடங்கலின்றி பூஜையைத் தொடர முடியும். ஒருவேளை, பூஜைக்கு நேரம் கிடைக்காது போனால், மனதுள் புதன் பகவானது மூல மந்திரத்தையும் ஸ்லோகத்தையும் சொல்ல... மருத்துவரையும் தேட வேண்டாம்; ஜோதிடரையும் பார்க்க வேண்டாம் ! ஆரோக்கியமும் அமைதியும்தான், நாம் ஒவ்வொருவரும் எதிர்பார்க்கிற சொத்து. அவை கிடைப்பதற்கு, புதன் பகவானை வணங்குங்கள்; வளம் பெறுவீர்கள்!

Comments