தேனீ வளர்ப்பு
மண்புழுக்களும்
மண்ணுக்குள் வாழும் பல கோடி நுண்ணுயிர்களும் மண்ணை வளப்படுத்துவதற்கு
உதவுகின்றன என்பது புதிய செய்தியன்று. தரைக்கு மேலும் வானிலைக்கேற்ப
பறவைகளும் தேனீக்களும் மலர்களிலிருந்து மகரந்தம் சேமித்தும்
பகிர்ந்தளித்தும் மண்ணை வளப்படுத்த பெரும்பங்கு செய்கின்றன.
உழவர்கள் தமது காய்கனி பயிர் சாகுபடிக்கு
மகரந்தச் சேர்க்கையின் இன்றியமையாத் தன்மையை நன்கு உணர்ந்திருப்பர்.
காய்கனி பயிர் வளர்ப்பு அதன் மலர்களிலுள்ள படியெடுத்தலைப் பெரிதும்
சார்ந்துள்ளது. எனவே இயற்கை வேளாண்மை என்பது தேனீக்கள் இன்றி அமையாது
என்கிறார் தேனீக்கள் வளர்த்து வரும் சாமிநாதன் என்பவர். சிறு வயது முதலே
இவர் தேனீக்கள் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்; இந்திய வகை, இத்தாலிய வகை
ஆகிய தேனீக்களை வெவ்வேறு தேன்கூட்டுப் பெட்டகங்களில் வைத்து வளர்க்கிறார்.
குறிப்பாக தேன்கூட்டுப் பெட்டகங்களை நாட்டின் வெவ்வேறு இடங்களிலிருந்து
பெற்றிருக்கிறார். கட்டுப்படியின்மையால் பல தச்சர்கள் தேன்கூட்டுப்
பெட்டகங்களைச் செய்துதர மறுத்தனர்.
அரசு வழங்கும் பெட்டகங்களும்
ஒரு மழைக்காலத்தைக் கூடத் தாங்குவதில்லை. இதனால், நல்ல தரமான தேன்கூடு
பெட்டகங்கள் கிடைப்பதற்குத் தொல்லைகள் நேர்ந்தன. தேனீ வளர்ப்பிலுள்ள வேறு
சிலருக்கும் இதே தொல்லைகள் இருந்திருக்கலாம். ஆனால், இவர் இதற்கு மாற்றாகச்
சமையலறையில் பயன்படுத்தப்படும் கடப்பா பலகைகளை வைத்து தேன்கூடு அமைக்கத்
தொடங்கினார். அவை கனமாக இருப்பதால் ஓரிடத்திலிருந்து வேறிடத்திற்கு மாற்றக்
கடினமாக இருக்கும். ஆனால் நெடுநாள் நீடித்திருக்கும்.
வணிக அடிப்படையில் பெருநகரங்களில் தேனீ வளர்ப்பு நடைமுறைக்கு ஒத்துவருமா?
ஊர்ப்புறங்களில் பயிர்களுக்கு அடிப்பது
போல நகரங்களில் வளர்ந்துள்ள சில மரங்களில் பூச்சிக் கொல்லிகளோ
வேதிப்பொருட்களோ அடிக்கப்படுவதில்லை. எனினும், இங்கு சுற்றுச்சூழல் மாசு
மிகுந்திருக்கும். ஆனாலும் அவை பூச்சிக்கொல்லிகளைப் போலத் தேனீக்களுக்குப்
பெரிதும் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை.
உணவுத்தட்டுப்பாட்டைத் தீர்க்கும் தேனீக்கள்:
- தனிப்பட்ட முறையில் பணம் பார்ப்பதற்காகத் தேனீக்களை வளர்ப்பதில்லை. அவற்றைப் படித்து அறிந்து கொள்வதற்காகவே வளர்க்கப்படுகிறது.
- தேனீக்கள் மட்டுமல்லாமல் மற்றைய
பூச்சிகளும் வளர்வதற்கு நகரங்களில் ஏற்ற சூழல் உள்ளதாக சாமிநாதன்
கூறுகிறார். பொதுவாக மக்கள் தேனீக்களின் கொட்டுக்கு அஞ்சுகின்றனர். ஆனால்,
சில ஆண்டுகளில் அவை நம்முடன் நன்றாகப் பழகிச் செல்லமாகிவிடும் என்று தமது
அநுபவங்களைச் சொல்லி வியக்க வைக்கிறார்.
- அவை நம் கைகளின் மீது மென்மையாக ஊர்ந்து செல்லும். எப்போதாவது தான் கொட்டும்.
- நம் நாட்டில் பலர் தேனீக்களைத் தேன்
சொரியும் பூச்சிகளாகத் தான் பார்க்கின்றனர். ஆனால், அவை இல்லாவிட்டால்
உணவுத் தட்டுப்பாடு வருங்காலத்தில் மேலும் கடுமையாவது உறுதி என்றும்
அச்சுறுத்துகிறார்.
- மனிதர்களோடு வயல் விலங்குகளும்
இதனால் பாதிக்கப்படும். ஏனெனில், அந்த விலங்குகள் மேயும் மசால்புற்கள்
வளர்வதற்குத் தேனீக்கள் மகரந்தம் சேர்க்கின்றன.
தர வரிசை:
- காய்கனி சாகுபடியில் சீனாவிற்குப்
பின் இந்தியா உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. தேனீக்களைப் போன்ற
மகரந்த சேர்ப்பிகளின் செழிப்புக்கும் காய்கனி விளைச்சலுக்கும் தொடர்பு
உள்ளது. தேனீக்கள் அரிதாகும்போது காய்கனி விளைச்சலும் குறைந்து போகும்
என்று கூறுகிறார்.
- ஐ.நா வின் உணவு மற்றும் வேளாண்மை
அமைப்பு அறிக்கையின் படி 140க்கும் மேற்பட்ட நாடுகளில் 90 விழுக்காடு உணவு
வழங்கும் 100 பயிர்வகைகளில் 71 பயிர்கள் மகரந்தச் சேர்க்கையினால் செழிப்பவை
என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
- தேனீக்கள் காலை கூட்டிலிருந்து
கிளம்பி சராசரி 3 முதல் 5 கி.மீ வரை பயணிக்கும். மலர்களிலிருந்து மகரந்தம்
எடுத்து சேமித்துக்கொண்டு அதன் கூட்டில் தமக்கு உணவு சமைக்கும்.
தேனீக்களின் கழிவுகள்:
செரித்து மீந்த மகரந்த உணவைத் தேனீக்கள்
கழிக்க வேண்டும். தேனீக்களின் கழிவு என்பது வெளிர் மஞ்சள் நிறத்தில்
நீர்த்துளியைப் போன்ற நீர்மம். இவை தேனீச்சாணம் என்று அழைக்கப்படுகிறது.
தேனீக்கள் தமது கூட்டிலிருந்து 10 – 30
மீட்டர் தொலைவு கொண்ட இடத்தைக் கழிப்பிடமாகக் கொள்ளும். சராசரியாக ஒரு
தேன்கூடு ஆண்டுக்கு 45 – 50 கிலோ சாணம் கழிக்கும். மழை பொழியும்போது இந்தச்
சாணம் மண்ணோடு குழைந்து அருமையான இயற்கை உரமாகிவிடுகிறது. இதனால், இயற்கை
வேளாண்மை செய்யும் உழவர்கள் தேனீக்கள் வளர்ப்பதன் வாயிலாகத் தேனீக்கழிவு
இயற்கை உரம் கொண்டு கூடுதல் விளைச்சல் காணலாம்.
உழுவார் தாம் கொல்லைகளில் 3 – 4 கூடுகளில்
தேனீக்கள் வளர்த்து அவை தரும் பயன்பாடுகளைப் பெற்று பயனடைய வேண்டும் என்று
வேண்டுகோள் விடுக்கிறார்.
இவர் தேனீக்கள் வளர்ப்பிற்கு கூடுகளை வாடகைக்கு அளிக்கிறார்.
மேலும் விவரங்களுக்கு:
swaminathan9@gmail.com செல்பேசி: 9487887800
ஆங்கில மூலம்: http://www.thehindu.com/sci-tech/article1564787.ece
Comments
Post a Comment