27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்-[கேடை - Jyeshta]
27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்-[கேட்டை - Jyeshta]
ஸ்தல வரலாறு:
ராமானுஜர், அவரது குரு பெரிய நம்பிகள், சீடர் கூரத்தாழ்வார் ஆகியோர் ஸ்ரீரங்கத்தில் தங்கியிருந்தனர். ராமானுஜர் புகழ் பெறுவதைப் பிடிக்காத சோழ மன்னர் ஒருவர், அவரை சிறைப்பிடித்து வரும்படி படைகளை அனுப்பினார். படையினருக்கு ராமானுஜரை அடையாளம் தெரியாது. எனவே, சீடர் கூரத்தாழ்வார், ராமானுஜர் போல வெண்ணிற ஆடை அணிந்து, சோழ படையினரிடம் நானே ராமானுஜர் என்று சொல்லி அவர்களுடன் சென்றார். அவருடன் பெரிய நம்பிகளும் அவரது மகள் திருத்துழாயும் சென்றனர்.
பெரியநம்பியிடமும், கூரத்தாழ்வாரிடமும், தனது மதமே உயர்ந்தது என எழுதித்தரும் படி மன்னன் சொன்னான். அவர்கள் மறுக்கவே, இருவரின் கண்களையும் பறிக்கும் படி கூறினான். கூரத்தாழ்வார், தன் கண்களை தானே குத்தி பார்வை இழந்தார். சோழ வீரர்கள் பெரியநம்பிகளின் கண்களைக் குருடாக்கினர். பார்வையிழந்த இருவரையும் திருத்துழாய் அங்கிருந்து அழைத்து வந்து, இத்தலத்தில் தங்கினாள். இவ்வேளையில் பெரிய நம்பிகளுக்கு வயது 105. தள்ளாத வயதில் கண்களை இழந்து துன்பப்பட்டார். அப்போது அவருக்கு காட்சி தந்த வரதராஜப்பெருமாள், அவர் தங்கியிருந்த இந்த தலத்திலேயே மோட்சம் கொடுத்தார். இவர் வரதராஜ பெருமாள் எனப்படுகிறார். இவருடன் பெருந்தேவி தாயாரும் அருள் செய்கிறாள்.
சிறப்பம்சம்:
பெரியநம்பிகள் மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் அவதரித்தார். அன்று இவரது திருநட்சத்திர விழா நடக்கும்.. மாதந்தோறும் வரும் கேட்டை நட்சத்திரத்திலும் இவருக்கு பூஜை உண்டு. கேட்டை நட்சத்திரத்தினர், தங்களுக்கு ஜாதக தோஷம் நீங்க இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இந்த வழிபாட்டைச் செய்பவர்கள் இவருக்கு வெண்ணிற வஸ்திரம், மல்லிகைப்பூ மாலை அணிவித்து, அதிரசம், வடை நைவேத்யம் செய்கின்றனர். மருதாணி இலை, கரிசலாங்கண்ணி, செம்பருத்தி ஆகிய மூன்றும் சேர்த்த எண்ணெயில் தீபமேற்றி வழிபடுவது நல்ல பலன் தரும் என்பது நம்பிக்கை. இந்த எண்ணெய் கோயிலிலேயே கிடைக்கிறது.கேட்டை நட்சத்திரத்துடன் கூடிய செவ்வாய்க் கிழமைகளில் வழிபட்டால் பலன் இரட்டிப்பாக இருக்கும் என்கின்றனர். கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கூரத்தாழ்வாரிடம் வேண்டிக் கொள்கின்றனர்.
கேட்டை நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:
கல்வியில் தேர்ச்சி பெற்று திகழ்வர். தைரியமும் துணிச்சலும் இயல்பாக இருக்கும். குறும்புத்தனமும், நகைச்சுவையும் கொண்டவர்கள். அழகாகவும், சுருக்கமாவும் பேசுவதில் வல்லவர்கள். முன் நின்று எந்தச் செயலையும் நடத்திக் காட்டும் சாமர்த்தியம் உண்டு. முன்கோபம் இருந்தாலும், யாருக்கும் தீங்கு எண்ண மாட்டார்கள்.
பிரதான தேவதை[Pradhana Devatha] : இந்திரன் [Indra].
அதி தேவதை[AtiDevatha] : இந்திரன் [Indra]
இருப்பிடம்:
தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 13 கி.மீ., தூரத்திலுள்ள பசுபதிகோயில் பஸ் ஸ்டாப்பில் இருந்து அரை கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது.
திறக்கும் நேரம்: காலை 7- 9 மணி, மாலை 5.30- இரவு 7.30 மணி.
Comments
Post a Comment