FKart PrmotionalBanners

புது சக்தி தரும் சூரிய நமஸ்காரம்

புது சக்தி தரும் சூரிய நமஸ்காரம்

பூமியில் உள்ள எல்லா சக்திகளுக்குமே மூலக் காரணம் சூரியன்தான். அந்த சூரிய ஒளி மட்டும் பூமிக்கு கிடைக்காவிட்டால் எந்த உயிரினமும் பூமியில் வாழ முடியாது.

இதனால்தான் சூரிய நமஸ்காரம் என்கிற யோகக்கலையையும் நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்துள்ளனர். எப்படி சூரியன் வழியாக நம் பூமிக்கு சக்திகள் கிடைக்கின்றனவோ, அதுபோல் சூரிய நமஸ்காரம் தினமும் செய்வதன் மூலமும் நம் உடலுக்கு தேவையான பல்வேறு சக்திகள் கிடைக்கின்றன.

சூரிய நமஸ்காரத்தில் உடல் அசைவுகளும், மூச்சு ஓட்டமும் இணக்கமாக நடைபெறுகின்றன. நுரையீரல்களில் காற்றோட்டம் தாராளமாகிறது. ஏராளமான கரியமில வாயுவும் பிற நச்சுப் பொருள்களும் மூச்சு மண்டலத்திலிருந்து வெளியேற்றப்படுகின்றன. ஜீரண மண்டலத்திற்கு கூடுதல் சக்தி கிடைக்கிறது. கல்லீரல், வயிறு, மண்ணீரல், குடல்கள் எல்லாம் நன்றாக மசாஜ் செய்யப்படுகின்றன. இதனால் மலச்சிக்கல் பிரச்சினைக்கு இடமில்லாமல் போகிறது. மேலும், வயிற்று உறுப்புக்களில் ரத்தம் தங்குவதில்லை என்பதால் உடல் உறுதியாகிறது.

இவற்றோடு, சிறப்பு பலனாக நம் நினைவாற்றல் அதிகரிக்கிறது. அதாவது, தொடர்ந்து சூரிய நமஸ்காரம் செய்து வந்தால் ரத்தக் கொதிப்பு மட்டுப்படுத்தப்படுகிறது. இதயத் துடிப்பும் சீராகிறது. சிம்பதட்டிக், பாராசிம்பதட்டிக் நரம்புகளின் செயல்களை நெறிப்படுத்துவதன் மூலம் நல்ல ஓய்வுக்கும் உறக்கத்திற்கும் இது உதவுகின்றது. இதனால் நினைவாற்றல் அதிகரிக்கின்றது.

உடல் பொலிவுக்கும் சூரிய நமஸ்காரம் பயன்படுகிறது. சூரிய நமஸ்காரத்தை முறைப்படி செய்யும் போது உடலில் இருந்து வியர்வைத் துளிகள் வெளியேறும். அதன் மூலம் உடலில் உள்ள ஏராளமான நச்சுப்பொருட்கள் தோலின் வழியே வெளியேறுகின்றன. எந்த அளவுக்கு வியர்வை வெளிவருகிறதோ அந்த அளவுக்கு நற்பலன்கள் ஏற்படும்.

மேலும், சூரிய நமஸ்காரத்தில் நம் கழுத்தானது முன் பின் வளைக்கப்படுகின்றது. இதனால் தைராயிடு, பாராதைராயிடு சுரப்பிகளுக்கு ரத்தம் சீராக கிடைக்கின்றது. அவை சிறப்பாக செயல்படுவதனால் எல்லா எண்டோக்கிரைன் சுரப்பிகளும் தமக்குரிய இயல்பான பணிகளைச் செய்கின்றன. இதன் மூலம் தோலானது புத்துணர்வு பெற்றுப் பொலிவு பெறுகின்றது.

சூரிய நமஸ்காரம் செய்ய உகந்த நேரம் காலைதான். அது முடியாதவர்கள் மாலையிலும் செய்யலாம். சாப்பிட்ட பின் குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்து தான் இதை செய்ய வேண்டும்.

Comments

Popular Posts