சுகர் ஜீவநாடி
சுகர் ஜீவநாடி
சுகப் ப்ரம்ம மஹரிஷியைப் பற்றி பலரும்
அறிந்திருக்கக் கூடும். கிளி போன்ற முகம் உடைய இம்மகரிஷி சதா ப்ரம்மத்தோடு
ஒன்றிய நிலையில் இருந்ததால் சுக ப்ரம்ம மஹரிஷி என்று அழைக்கப்பட்டார். இவர்
மஹாபாரதத்தை உலகுக்குத் தந்த வேத வியாசரின் புதல்வர். ”சுக முனிவர்” என்ற
பெயரும் இவருக்கு உண்டு. இவர் அருளியதுதான் ”ஸ்ரீமத் பாகவதம்.” என்றும்
பதினாறு வரம் பெற்ற மார்க்கண்டேயன் இவரது சீடன். இவரது மற்றொரு சீடர்
கௌடபாதர். அவரது சீடர் கோவிந்த பகவத் பாதர். அவரது நேர் சீடர்தான் ஆதி
சங்கரர். இதிலிருந்து சுக முனிவரின் பெருமையை உணர்ந்து கொள்ளலாம்.
இவரது காயத்ரி மந்திரம்
ஓம் வேதாத்மஹாய வித்மஹே
வியாச புத்ராய தீமஹி;
தந்நோ சுகர் ப்ரசோதயாத்!
மானுட குலம் உய்ய அவதரித்த இந்த மகான்
இன்றும் மானுட சேவை செய்து வருகிறார் தமது ஜீவ நாடி மூலம். இந்நாடி மூலம்
பலன்கள் கூறி வருகிறார் ஸ்ரீ குமார் குருஜி. இவரிடம் உள்ள நாடியின் பெயர்
”சுகர் மார்க்கண்டேய நாடி” திரைப்பட மற்றும் நாடக நடிகர் எஸ்.வி. சேகர்
உட்படப் பல புகழ் பெற்ற மனிதர்களுக்கு ஸ்ரீ சுக ப்ரம்ம மகரிஷிதான் குரு.
ஆன்மீக வழிகாட்டி.
இந்த ஆசிரமம் மக்களுக்கு சோதிடப் பலன்களை
மட்டுமல்லாது, தேவையான மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கி, ஏழை எளியோர்களுக்கு
உதவி வருகிறது. மற்றும் பல்வேறு அறப்பணிகளையும், ஆன்மீக, ஆலயப் பணிகளையும்
‘சுகர் மார்க்கண்டேயன் அறக்கட்டளை’ என்ற பெயரில் செய்து வருகின்றது.
இங்கு மற்ற நாடிகளைப் போல விரல் ரேகை,
பெயர் போன்ற விபரங்களைக் கொடுக்கத் தேவையில்லை. மாறாக இந்த இந்த
இராசிக்குரியவர்கள், இன்னின்ன கிழமைகளில் வந்து சுவடி பார்க்கவேண்டும்
என்று வரைமுறை உள்ளது. அம்முறைபடிச் சென்று நாடி பார்த்தால்
அவரவர்களுக்குரிய பலா பலன்கள் தெரியவரும். பலன்களும் மிகத் துல்லியமாக
இருப்பதாக நாடி பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
நாடி பார்க்கும் முறை
குறிப்பிட்ட கிழமையில் நாடி பார்க்க
வருபவர்களிடம் முதலில் அமைதியாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.
பின்னர் இறைவழிபாடு நடக்கிறது. அதன் பின்னர் ஸ்ரீ குமார் குருஜியால் நாடி
வாசிக்கப்படுகின்றது. அது பாடல் வடிவில் அமைகின்றது. பின்னர் பலன்கள்
கூறப்படுகின்றன. நாடி வருவோரிடம் எந்தக் கேள்வியும் கேட்கப்படுவதில்லை.
என்ன தேவையோ, என்ன சிக்கலோ அது பற்றி நாடியில் விரிவாகவும் விளக்கமாகவும்
வருகின்றது. அதற்கான பரிகார முறைகளும் கூறப்படுகின்றன. அனைத்தும் சரியாகவே
இருக்கின்றன.
ஸ்ரீ குமார் குருஜி இதனை ஒரு இறைப்பணியாகத்
தான் செய்து வருகின்றார். இவருக்கு இந்த ஓலைச்சுவடிகள் இவருடைய குருவான
ஸ்ரீ ஜெயகாந்தி நாயுடு மூலம் கிடைத்துள்ளன. ஜெயகாந்தி நாயுடு கடலூருக்கு
அருகே உள்ள திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்ததான ‘தொட்டிப்பதி” என்னும்
ஊரைச் சேர்ந்தவர். விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இயற்பெயர் ராமசாமி.
இவருக்குப் பரம்பரைச் சொத்தாக உமாமகேசனார் ஏடுகளும், சுகர் மகரிஷி ஏடுகளும்
கிடைத்தன. இறை அருளால் அவரும் மக்களுக்கு அதனை வாசித்து நல்வழி காட்டி
வந்தார். பின்னர் ஸ்ரீ குமாரைத் தமது சீடராக ஏற்றுக் கொண்ட ஜெயகாந்தி
நாயுடு, அவருக்கு ”ஸ்ரீ விஜயப் பிரம்ம ஸ்ரீகாந்தி” என்ற பட்டத்தைச்
சூட்டினார். நாயுடுவின் மறைவுக்குப் பின் ஸ்ரீ குமார் குருஜி தமது குரு
வழியில் இப்பணியைச் செவ்வனே செய்து வருகின்றார். தற்பொழுது தொட்டிப்பதி
என்னும் சிற்றூரில் சுகர் மகரிஷி மற்றும் முருகனுக்குக் கோயில் எழுப்பி
கும்பாபிஷேகமும் செய்துள்ளனர். ஆஸ்திரேலியாவிலும் இவர்கள் ஆசிரமத்திற்குக்
கிளை உள்ளது.
ஸ்ரீ தன்வந்த்ரி விழா, சுகப்பிரம்ம மகரிஷி
மகா ஜெயந்தி விழா போன்றவை ஆண்டு தோறும் இங்கு மிகச் சிறப்பாக நடைபெற்று
வருகின்றன. இவர்களது ஆஸ்ரமம் தி.நகரில் அமைந்துள்ளது.
Comments
Post a Comment