FKart PrmotionalBanners

யோக சித்தி ரகசியங்கள்

யோக சித்தி ரகசியங்கள்

கட்டுரையாளர்: திரு. பரந்தாமன்,விருது நகர், தமிழகம்
கட்டுரையைத் தட்டச்சு செய்து வழங்கியவர்: திரு.மோகன சுந்தரம் mohana.sundaram.r@gmail.com


ஞான யோகம், இராஜ யோகம், சன்மார்க்க யோகம்
1. உயிர் வர்க்க சன்மார்க்க நெறி
2. யோக ஞான மார்க்கங்களுக்கு அழைத்துச் செல்லும் கிரக அமைப்புகள்
3. உண்மையான குருமார்கள் நிலை
4. தேகதத்துவங்கள் - ஸ்தூல பூதங்கள்
5. உள்கருவிகளில் பஞ்சபூதங்கள்
6. காலாகில வாசி
7. பஞ்சாக்கினி விபரம்
8. யோகிகளின் பார்வையால் ஸ்பரிசத்தால் சப்தத்தால் நோய் தீர்த்தல்
9. பஞ்சாட்சர மந்திரங்கள்
10. அஷ்டாங்க விவரம்
11. நித்திரை செய்யும் முறை
12. சுத்தாரம்மம்
13. சித்திகளடைய முக்கிய கவனிப்பு
14. சிவயோக சாரம்
15. இடகலை, பிங்கலை, சுழுமுனை தன்மைகள்
16. பூரக, ரேசக, கும்பக விபரம்
17. பிராணாயாம நிர்ணயம்
18. குண்டலினி ஸ்தான நிலை - அமிர்த்த நிலை ஸ்தானம்
19. குண்டலினி யோக கிரியைகள்
20. ஜப, நாத யோகம்
21. தாடன நௌமுகி கிரியைகள்
22. சாம்பவி முத்திரை விளக்கம்
23. உண்மை உபதேசம்
24. சொரூபதரிசனம், சூட்சும சரீரத்தை செயல்படுத்துதல்
25. சிதாகாச தரிசனம்
26. யோகநிஷ்டை செய்யும் முன்பு கவனிக்க வேண்டிய முக்கிய விதிகள்
27. சாயா புருஷ தரிசனம்
28. ஆசனங்கள்
29. மானச தந்தி [Telepathy]
30. மூளையை வலுப்படுத்தும் பயிற்சி
31. தொலைவில் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் கிரியை
32. தண்ணீரில் சக்தியை ஏற்றுதல்
33. இராஜ யோகம் செய்யும் முறை [கேசரி-சாம்பவி முத்திரை-பிராணாயாமம்-குண்டலினி யோக முறை]


இராஜ யோகம் செய்யும் முறை

அட யோகம் செய்தவர்கள் சுலபமாக இராஜ யோகம் செய்யலாம். எப்போதும் உடல் அசையாமல் இருந்து இந்த யோகம் செய்ய ஆரம்பிக்க வேண்டும். சூரியன் போன்ற மனதிற்கு வாயுதான் நாதன். வாயுவிற்கு லயமே நாதன். இந்த வாயுவை ஜெயித்து சர்வசங்கல்பமும் விட்டு இருந்தவன் காலத்தை வென்றவானாகிறான்.

கேசரி, சாம்பவி முத்திரையில் இருந்து யோகியானவன் உள்ளே திருஷ்டியையும் புறத்திலே நினைவுமாக நாதத்தில் லயித்து இருக்க வேண்டும். இந்த சாம்பவி முத்திரையில் சூன்யமாய் இருக்க வேண்டும். இந்த சாம்பவி முத்திரையில் சூன்யமாய் நின்றாலும், சூன்யமில்லாமல் நின்றாலும் அதுதான் பாரத்துவமான சிவபாதம் அல்லது சிதம்பரம் எனப்படும். இந்த சாம்பவியாகிய பரசிவபதத்திற்கு 2 திருஷ்டிகள் உண்டு. அதில் ஒரு திருஷ்டி மத்தியில் மேல் நோக்கி பார்க்கும் போது நட்சத்திரங்கள் போலவும், ஜோதி போலவும் பிரகாசித்து நிற்கும். அப்படியே பார்க்கின்ற திருஷ்டியை உள்ளே பார்த்தால் அது உள்மணிக்கு காரணமாகிறது. இந்த திருஷ்டியானது நினைவு வைத்த இடத்தில் நிற்கும். அதில் அப்படியே லயித்து இருந்தால் சந்திராமிர்தம் [சகஸ்ராரத்திலிருந்து] சுரக்கும். அதை ஜீவன்பானம் செய்யும்.

இன்னெரு விதத்தில், முக்தாசனத்தில் இருந்து கேசரி முத்திரை அல்லது சாம்பவி முத்திரையிலிருந்து கொண்டே சுவாச ஓட்டத்தை விட்டு மூலத்தில் மனதை வைத்து நாதத்தை மனதில் கேட்டு புற சலனங்களை ஒடுக்கி நாதமாகிய பாவனா சமுத்திரத்தில் அமிர்தபானஞ்செய்து கொண்டு சிதாகாசத்தில் லயித்து இருத்தல் ஆகும். இப்படி இருப்பதை உள்மணி அவஸ்தை என்று சொல்வார்கள். அப்போது கிரந்திகள் உடையும்.

பிரம்ம கிரந்தி உடைந்தால் நல்ல நாத ஓசை, மணி ஓசை போல் கேட்டுக் கொண்டே இருக்கும். இந்த தொனியை கேட்டுக் கொண்டே இருக்கும். இந்த தொனியை கேட்டுக் கொண்டே இருந்தால் தேகம் ஒளிமயமாகி ஆனந்த நிலையும் உண்டாகும். இது யோகமார்கத்தின் சித்தியாகும். விஷ்ணு கிரந்தியில் வாயுவை ஏற்றி அதுவே நினைவாக இருந்தால் தேவதைகளுக்கு சமமான நிலையை அடையலாம். அப்படி ஏற்றினால் விஷ்ணு கிரந்தி உடையும். ருத்திர கிரந்தி உடைகிற காலத்தில் சரீரம் அறியாமல் உணர்வு நிற்கும். மத்தள நாதம் பிறக்கும். இதனால் சகல தோஷங்களும் நீங்கி நரை, திரை, மரணம் மூப்பு, பசி, தாகம், நித்திரை இல்லாத நிலை உண்டாகும். இந்த நிலையை அடைந்த யோகிகள் காய சித்தி அடைந்து ஜீவன் முக்தர்களாக எப்போது வேண்டும் வரையிலும் ஜீவித்திருப்பார்கள். அஷ்டமா சித்திகளையும் பெறுவர். நினைத்தது எல்லாம் சித்தியாகும்.

நமது பரமபதமான சரீரத்திற்கு நடுவே இருக்கிற குண்டலினி சக்தியானது நடுவே பிரகாரமாய் வளைந்து இருக்கும். இவ்வாறு நித்திரையிலிருக்கும் குண்டலினியின் நித்திரையை எழுப்பியவனே பரமயோகி ஆவர். சுழுமுனை என்கிற குண்டலினியாகிய சாம்பவி சக்தி 72,000 கொடிகளாலே பின்னப்பட்டது. இந்த தேகமாகிய கூடு சுழுமுனைமார்கத்தில் குண்டலினி வற்றினால் மனோன்மணியாகிய சக்தி தரிசனம் கிடைக்கும்.

யோக முத்திரையிலிருந்த யோகி, சக்தி மத்தியிலே மனதை வைத்து மனதின் மத்தியிலே சக்தியை வைத்திருக்கும் இடமே நிர்வாணம், கைலாசம், பரமபதம், முக்தி என்பதாகும். ஆகாசத்தில் நடுவே மனதை வைத்து மனதின் நடுவே ஆகாசத்தை வைத்தால் அந்த ஆத்மா ஆகாசமயமாக இருக்கும். ஒன்றையும் நினைக்காமல் அதையே தியானிக்கவும். அப்போது பிரணவ தேகம் ஆகும். எப்போதும் சிந்தனையை உள்முகமாக வைக்க வேண்டும். அப்போது சகலமும் சித்தியாகும்.

இராஜ யோகம் செய்வதற்கு இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய எண்படிகள் இருக்கின்றன.

இயமம்: அஹிம்சை அல்லது உயிர்வதை செய்யாதிருத்தல் ஆகும். பொய் களவு செய்யாதிருத்தல். எப்போதும் மனம் சுத்தமாயும் நல்லதையே நினைத்தும் செய்தும் இருத்தல்.

நியமம்: தேக சுத்தியுடனும், மன சந்தோஷத்துடனும் முறைபடி யோகம், தியானம் செய்ய அமைதியாயிருத்தல். ஆத்ம ஞானம் அடைய அணுசாரனையாக கிரமப்படி எல்லாமே செய்தல் ஆகும்.

ஆசனம்: முக்கிய ஆசனங்கள் 16 ஆகும்.

பிரணாயாமம் என்பது வாயுவை கட்டுப்படுத்துதல் ஆகும். இதன் விதிகள் மித போசனம் செய்தல், நித்திரை அதிகம் செய்யாதிருத்தல், சோம்பல் இன்றி, ஆசாபாசங்களை விட்டு இருத்தல் ஆகும்.

பிரத்யாகாரம் என்பது மனதை அடக்குதல் ஆகும். ஐம்புலன்களை கட்டுப்படுத்துதல் ஆகும்.

தாரணை என்பது மனதை ஒருமுகப்படுத்துதல் ஆகும். ஓரு வஸ்துவில் சிந்தனையை நிறுத்தி அதிலேயே லயித்து இருப்பதாகும்.

தியானம் என்பது மனதை அடக்கி ஒரு நிலைப்படுத்தி புருவமத்தி அல்லது நாசிநுனியில் நாட்டம் வைத்து அதில் லயித்திருப்பதாகும்.

சமாதி என்பது தியானத்தின் முடிவு ஆகும். மனதை கட்டுப்படுத்தி ஒருநிலைப்படுத்திய நிலையில் அதில் லயித்து ஜோதியைக் கண்டு அதிலேயே மூழ்கி புறசலனஙகளில்லாமல் இருத்தல், சுவாசத்தை ஆக்ஞாவில் நிறுத்தி அதில் நாட்டத்தை வைத்து அதில் தரிசித்து இருத்தல் ஆகும்.

பிரணாயாமம்: இதில் 4 நிலைகள் இருக்கிறது.
1. முதலில் சுவாசத்தை உள்ளே இழுப்பது. இதற்கு பூரகம் என்று பெயர்.
2. இழுத்த சுவாசத்தை உள்ளே நிறுத்தி வைப்பது. இதை கும்பகம் என்று கூறுவர்.
3. இவ்வாறு உள்ளே நிறுத்திய சுவாசத்தை வெளிவிடுதலை ரேசகம் என்பர்.
4. வெளியே சுவாசத்தை விட்டபிறகு அப்படியே வெளியே சுவாசத்தை நிறுத்துதல். இதற்கு பகிரங்க கும்பகம் அல்லது கேவல கும்பகம் என்று கூறுவர்.
குறிப்பு: பகிரங்க கும்பகம் - 60-லிருந்து 120 வினாடிகள். 6 மாத, ஒரு வருட பழக்கத்தில் தான் பூரணமாய் செய்ய வேண்டும்.

சூட்சும சரீரத்தை செயல்படுத்துதல்

பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் உட்கார்ந்து உங்கள் சரீரத்தை மனக்கண்ணால் உணர்ந்து சுவாசம் விடுபடுவதை உணரவும். இப்போது உஜ்ஜயி பிராணாயாம சுவாசமும் கேசரி முத்திரையில் செய்யவும். இவ்விதமாக சுவாசத்தை உணர்ந்து வரவும். இப்போது உள்ளே சுவாசத்தை பூரிக்கும்போது சரீரம் விரிவடைவதாக உணரவும். அதுபோல சுவாசத்தை ரேசகம் செய்யும் போது உடல் சுருங்குவதாக உணரவேண்டும்.

உண்மையிலே ஸ்தூல சரீரம் அப்படியேதான் இருக்கிறது. ஆனால் சூட்சும சரீரம்தான் விரிந்தும் சுருங்கியும் செயல்படுகிறது. இந்த பயிற்சி முறைகளை விடாமல் செய்துவர சூட்சும சரீரம் மிக பெரியதாக ஆகியும், மிக சிறியதாக சுருங்கி வருவதையும் உணரலாம். இப்போது ஸ்தூல தேக உணர்வை விட்டு சூட்சும சரீரத்திலேயே நாட்டத்தை வைத்து அது விரிவடைவதையும் சுருங்குவதையும் உணரவும். மனக்கண்ணால் காணவும். இப்படியே பயிற்சி முறைகளை செய்து வரும் போது சுசூட்சும சரீரம் சுருங்கி ஒரு சிறு ஒளியுள்ள புள்ளியாகத் தெரியும். அப்போது பயிற்சி செய்வதை நிறுத்தி விடவும்.

சூட்சும உள்ளம் தரிசனம்

இந்த உள் மனதரிசனத்துக்கு மேலே சொல்லிய பயிற்சி முறைகளின் முடிவில் நீங்கள் ஓர் ஒளிவடிவமான பிந்து அல்லது புள்ளியை கண்டோம். இப்போது அந்த சிறு ஒளிவட்டத்தையே உணர்வுடன் புருவமத்தியில் கவனிக்க வேண்டும். இப்போது அந்த ஒளியானது தங்கமயமான வண்ணத்தில் கொஞ்சம் கொஞ்சமாகபெரியதாகி கொண்டே வரும். ஆனால் அதில் இருந்து ஒளிக் கற்றைகள் வீசாது. இந்த தங்கமயமான ஒளியானது கடைசியில் விரிவடைந்து உங்கள் ஸ்தூல சூக்கும உடல் வடிவம் அடைந்துவிடும்.

இதுதான் உங்களது ஆத்ம ஜோதி. இந்த ஜோதி தரிசனத்தை காணும் போது மிக ஆனந்தமாக இருக்கும். இந்த பயிற்சியை அடிக்கடி செய்து உங்கள் ஆத்ம ஜோதி தரிசனத்தை பார்த்து வர வேண்டும். இந்த நிலையை அடைந்தபின் வேண்டியது எல்லாம் கிடைக்கும்.

சிதாகாச தரிசனம்

இதை சிதாகாய தாரணை எனவும் கூறலாம். இது தன்னைத்தானே உள்ளே பார்க்கும் [அந்தர்முக] தியானமாகும். உள்ளே உள்ள இடைவெளிகளை பார்ப்பது ஆகும். ஆனால் இது உடலில் தலையில், வயிற்றில் உள்ள வெற்றுவெளி அல்ல. இந்த சிதாகாசம் என்பது உணர்வுகள் இருக்கும் உற்பத்தி ஆகும் சூன்ய பிரதேசம். இது ஆக்ஞா சக்கரத்தின் மூலமாக காணக்கூடிய இருண்ட வெளியாகும். இதுதான் மனத்தின் தொடர்பை ஏற்படுத்தகூடியது. இந்த தொடர்பினால் மனிதன் தன் மனதை அடையவும் உள்மனதை அடையவும் அதையும் மீறி அதற்கப்பால் உள்ள மிக நுண்ணிய உணர்வுள்ள மகா உள்மனதையும் தொடர்புகொள்ள முடியும். இந்த நிலையை சிதாகாச தாரணை மூலம் எட்டலாம். உங்களது உள் உணர்வுகளின் ரகசியங்களையும் மனதின் நிலைகளையும் உள்ளத்தின் நிலைகளையும் தெரிந்துகொள்ள ஓர் அற்புதமான ரகசியத்தை வெளிக்கொணர அமைந்த திறவுகோலாகும். இந்த சிதாகாச தரிசன சூட்சுமம். இந்த சாதனையை முடிப்பவர்கள் அரும்பெரும் காட்சிகளை காணக் கூடிய சித்தர்களாக ஆகி விடுவார்கள்.

சாதனை பயிற்சி முறை

அமைதியாக ஓர் ஆசனத்தில் முதுகு தண்டு வளையாமல் நேராக நிமிர்ந்து உட்கார்ந்து கைகளை இரு முழங்கால்கள் மீதோ அல்லது மடியில் ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து உட்காரவும். இவ்வாறு அசையாமல் உட்காரவேண்டும். அமைதியாக கண்களை மூடிக் கொண்டு காதில் என்ன சப்தம் கேட்கிறது என கவனிக்க வேண்டும். மற்ற சப்தங்கள் கேட்ககூடும். இந்த வெளிநிலையில் இருந்து விலகி இனி உடல் அசைவற்று நிச்சலனமாக உட்கார்ந்து இருப்பதை மட்டும் நினைக்க வேண்டும் உணர வேண்டும். அமைதியாக உட்கார்ந்து இருப்பதையும் சுவாசம் உடலில் உள்ளே போய் வெளியே வருவதையும் மட்டுமே உணர்ந்து கொண்டு இருக்கவும். வேறு எந்த எண்ணமும் இருக்கக் கூடாது. நீங்கள் சுவாசம் விட வேண்டும் என்கிற அவசியமில்லை. ஆனால் சுவாசம் தன்னிச்சையாக நடந்து கொணடே இருக்கும். ஒரு சமயம் உள்ளே அதிக சுவாசம் போகும் வெளிவரும். ஒரு சமயம் உள்ளே சுவாசம் குறைந்து வரும். உள்ளே வெளியே வந்து போய் கொண்டிருக்கும் அதை அப்படியே கவனித்து வரவும். நீங்கள் சுவாசத்தை இழுக்கவோ வெளியேற்றவோ செய்ய வேண்டாம். இயற்கையாக சுவாசம் அதுவாக உள்ளே போய் வருவதை மட்டும் கவனிக்கவும். இப்போது உடல் அசையாமல் இருந்து கொண்டிருப்பதை மட்டும் உணர்ந்து கொண்டிருக்கவும்.

இனி சிதாகாசத்தை உணரவும். உங்கள் உள்ளே உள்ள வெளியை, அதாவது சூன்யத்தை இந்த வெளியானது சரீரத்தின் ஒவ்வொரு பகுதியிலும் சரீரம் முழுவதுமே பரவிக் கிடக்கும். இது உங்கள் தலையில் உள்ளதோ நெஞ்சில் உள்ள இடைவெளியோ வயிற்றில் உள்ளதோ அல்ல. ஆனால் சரீரம் முழுவதும் பரவி இருக்கும் வெளி ஆகும். இது ஸ்தூல சூட்சுமத்தில் உள்ள ஒவ்வொரு அணுவிலும் இருக்கும். உங்கள் மொத்த உருவத்திலும் இருக்கக் கூடியது இந்த சிதாகாசமாகும். இந்த சிதாகாசத்தை பார்த்தல் அல்லது தாரணை அல்லது சிதாகாச உணர்வு என்பது சரீரம் முழுவதுமே உள்ள சிதாகாசத்தை வெளியை சூன்யத்தை உணர்வதாகும். இது முதலில் இருண்டு கிடக்கும்.

உங்களது உருவில்லாத அருவத்தை உணரவும். இந்த உருவ அருவ தோற்றம் இருண்டே இருக்கும். இதன் வண்ணம் அதாவது சிதாகாச வண்ணம் கருமை அல்ல. ஆனால் பல வண்ணங்கள் மாறி மாறி வண்ணப் புள்ளிகளாக தோன்றி மறைந்து கொண்டே இருக்கும். வண்ண வண்ண நிறங்கள் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். தோன்றும் மறையும். எதுவும் நிரந்தரமாக நிற்காது. இந்த வண்ணத் தோற்றத்தையும் மறைவையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டே இருக்கவும். அப்போது பல நிறங்கள் உடனே தோன்றி உடனே மறைந்து கொண்டே இருக்கும். மணிக்கு மணி நாளுக்கு நாள் அதன் போக்கில் வண்ணங்கள் தோன்றி மறைந்து கொண்டே இருக்கும். இந்த சிதாகாசம் என்பது ஓர் அரூபமாகும். இவ்வாறு சிதாகாசத்தில் மாறி மாறி வந்து மறையும் நிறங்களை கவனித்து வர வேண்டும். இந்த வண்ணங்கள் தான் சரீரத்தில் உள்ள ஜீவசக்திகளின் பிரதிபலிப்புகளாக விளங்குகின்றன. இந்த சிதாகாசமானது சரீர முழுவதுமே வியாபித்து இருக்கிறது. இந்த சிதாகாசமானது சரீரம் அல்ல. ஆனால் சரீரமானது சிதாகாசத்திற்குள் இருக்கிறது. மனம் சர்வமும் ஒடுங்கி ஒரு நிலைப்பாட்டு உள்ளே பார்க்கும் போது ஒரு சூன்ய வெளி தோன்றும். அதுவே சிதாகாசம். இது சரீரம் முழுவதும் பரவி கிடக்கிறது. இவைகளை மானசீகமாக உணர்ந்து வர வேண்டும். இவைகளை பயிற்சி செய்யும் போது பலவித ஒளிகளை பல ரூபங்களில் காணலாம்.

இப்போது உங்கள் உணர்வுகளை புருவமத்தியிலே நிறுத்தி வைத்து அங்கேயே கவனமாகப் பார்க்கவும். அப்போது உங்கள் மானசீக உருவத்தை அங்கே பார்க்கவும். சிந்தனையை சிதாகாசத்தில் வைத்திருக்கும் போது உங்கள் புருவத்தில் ஒரு குகை மாதிரி வட்டத்தில் பார்க்கவும். அந்த வழி மிகச் சிறியதாகத் தெரியும். இப்போது ஸ்தூல தேகத்தைப் பார்த்து விட்டு, சூட்சும சரீரத்தை காண முயற்சி செய்யவும். அப்போது உடலில் ஒரு சிலிர்ப்பு ஏற்படும். அப்போது உங்கள் சிதாகாசத்தை கண்டு உணரலாம். பல வண்ணங்கள் புள்ளி புள்ளிகளாகதோன்றி உடனே மறையும். இப்படியே வண்ணங்கள் வந்து போய் கொண்டே இருக்கும். வினாடிக்கு வினாடி இதன் வேகம் அதிகரிக்கும்.

இதன்பின் நிதானமாக கவனத்துடன் வண்ணங்களில் லயித்து இருக்கவும். இப்போது புருவ மத்தியை கவனித்தால் அங்கு குகை போல ஒரு துவாரம் இருக்கும். அந்த குகையை பார்த்தால் ஒரே இருட்டாக இருக்கும். மேலும் நீங்கள் அதனுள் பிரவேசித்து விட்டால் ஒரே இருட்டு மயமாகத் தான் உணர்வீர்கள். இருட்டில் போய்கொண்டே இருப்பதை உணர்வீர்கள். அதுதான் சிதாகாசம். இப்போது ஓம் ஓம்என 7 தடவை மனதில் உச்சரிக்கவும். இந்த நிலையில் உங்களை சுற்றி ஓர் இருண்ட பிரதேசம் இருப்பதை உணர்வீர்கள். உங்கள் உடலானது மின்மினி போல் விட்டு விட்டு சிறிய துகள்களாக பிரகாசித்து மறையும். இதன் பின் நிதானமாக வெளியே வரவும். நீங்கள் உட்கார்ந்து இருப்பதையும் சுவாசம் விடுவதையும் உணரவும். இப்படியாக நிதானமாகவும் பொறுமையுடனும் இப்பயிற்சியை செய்து வந்தால் இதனுடைய அருமையான பலன்களை உணர முடியும். இந்த சிதாகாச தரிசனம் கிடைத்து விட்டால் நீங்கள் ஒரு பெரிய சாதகராக ஆகிவிடலாம்.

இதுதான் பிண்டத்தில் அண்டம் எனும் அண்டவெளிபோல் சிதாகாசவெளி என்பது ஆகும். அமைதியாக உட்கார்ந்து கண்களை மூடி புருவமத்தியில் பார்வையை வைத்து அதன் காட்சிகளை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அதே சமயத்தில் கேசரி முத்திரையில் இருந்து கொண்டு உஜ்ஜயி பிராணயாமம் செய்து கொண்டே உள்வெளி ஜோதியை பல வர்ணத் துகள்களாக பார்க்கலாம். இதன் பலன்கள் மிக அற்புதமானவை. உங்கள் உடலின் ஒவ்வொரு அணுவும் புதுப்பிக்கப்பட்டது போல அற்புதமாக இயங்கும். நோயற்ற வாழ்வுடன், நினைத்ததை முடிக்கும் வலிமையும் உண்டாகும்.

யோக சித்திக்கு வழிமுறைகள்

1. என்னிடம் மகத்தான சக்தி இருக்கிறது அதை நான் சீக்கிரம் தெரிந்து கொள்வேன். நான் யார் என்பதை தெரிந்து கொள்வேன்.
2. தீட்சை அல்லது உபதேசம் பெறுதல், மனதை ஒருநிலைப் படுத்துதல், தியானத்தில் அமைதியாக இருத்தல்: தியானம் என்பது அமைதியில் உள்ளது அதில் ஆத்மா பேசுகிறது. நாம் பேசி வீணாக்கிய சக்தி அந்தராத்மாவை காணும் தியானம் ஆகும்.
3. மறு உபதேசம் அல்லது தீட்சை: உண்மையை உணர்தல் ஆத்மாவை உணர்தல் ஆழ்நிலை தியான அனுபவங்களை பெறுதல்.
4. தினசரி காலை மாலை தியானம் செய்தல். தினமும் ஒரு முறை ஆசனம், பிராணாயாமம் செய்தல்.
5. மது, மாமிசம், கேளிக்கை கூடாது. எப்போதும் உண்மையே பேச வேண்டும். கோபம் வரவே கூடாது. மிகவும் திடசித்தமும் வைராக்கியமும் இருக்க வேண்டும்.
6. தியானத்தில் சில சித்திகள் கிடைப்பதை மற்றவர் மேல் பிரயோகிக்கவோ வெளியே காட்டவோ கூடாது. சாதனைகளை மிகவும் ரகசியமாக காப்பாற்றி வர வேண்டும்.
7. எப்போதும் இரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தியானம் செய்ய வேண்டாம். [இது ஆரம்ப சாதகர்களுக்கு மட்டும்]
8. எப்போதும் எதுவும் தெரியாதது போல் அமைதியாக இருக்க வேண்டும். பலருக்கும் அதையோ இதையோ செய்வது கூடாது. 9. நீங்கள் பெற்ற சக்திகள் அத்தனையும் உங்களுக்காகதான். உங்கள் நன்மைக்கே. அதனால் நீங்கள்தான் பயன் பெற வேண்டும். பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து தியானம் செய்யலாம்.

இலாஞ்சனை

அதிகாலையில் எழுந்து சகாசனத்தில் (சவாசனம்?) கண்களை திறந்து அசைவற்ற பார்வையால் சூட்சுமமாகிய ஒரு இலட்சியத்தை கண்ணீர் வரும் வரையில் பார்க்க வேண்டும். பிறகு கண்களை மூடி கொஞ்ச நேரம் சென்றபின் திடீரென கண்களை திறந்து எதிரில் நிச்சலனமாகிய ஆகாயத்தை ஏகாக்ர சித்தனாகச் சூரிய பிம்பம் தோன்றும் வரையில் பார்க்க வேண்டும். இதனால் நிர்மலமான திருஷ்டியுண்டாகும். இவ்விலாஞ்சனை நாசி நுனியில் சித்திக்கின் நோயற்ற வாழ்வும், புருவ மத்தியில் சித்தித்தால் கேசரி முத்திரையின் திறமும் அடைகின்றன. நேத்ர ரோகங்கள் பனிபோல் விலகும். இப்படிச் செய்வதால் சீவகாந்த சக்தி அதிகரிக்கும். இதன் காரணத்தினாலேயே மகான்கள் 8 நாள் 10 நாள் வரையிலும் பிரக்ஞையின்றி இருக்கிறார்கள்.

கேசரி முத்திரை

மேலைத் துவாரமென்றும், கபால குகையென்றும் கூறப்பெற்ற ஓங்கார நாதசங்கீத ரவி மணிமண்டப வீட்டின் மேல் வாசலாகிய அண்ணாக்கில் (அண்ணத்தில்?) நாவை மடித்து 4 அங்குலம் செல்லும்படி செய்தாலும், பார்வையை புருவமத்தியில் இருக்கும்படி அமைத்தலும் கேசரி முத்திரை.

இலாஞ்சனை சந்திர யோகம்

பௌர்ணமி நடுசாமத்தில் ஒருவித அணையில் மல்லாந்து சாய்ந்து கொண்டு, பூரண சந்திரனை 2 நாழிகை நேரம் ஒரே பார்வையாக இடகலையில் ஓங்-வங் என்று மானசீகமாகத் தியானித்து, 16 மாதம் பார்த்து வந்தால் கண் குளிர்ச்சியாகும் நிழல் சாயாது. வாசி கட்டும். நரை திரை ஏற்படாது.

இலாஞ்சனை சூரிய யோகம்

பங்குனி, சித்திரை மாதங்களில் அதிகாலையில் எழுந்து அங்கசுத்தி செய்து, சூரியன் உதயமாகி வருவதை தினம் 2 நாழிகை [48 நிமிட] நேரம் ஒரே பார்வையாகப் பிங்கலையில் ஓங்-சிங் என மானசீகமாக தியானித்து 20 நாட்கள் பார்த்து வந்தால் சூரியன் பால் போல தோன்றும். ஒரு மண்டலம் பார்த்து வந்தால், பிறகு எந்த வேளையிலும் சூரியனையாவது, வேறெவ்வித வெளிச்சங்களையாவது பார்த்து வந்தால் கண் கூசக் கூடாது. கண் கடுப்பு நிவர்த்தி ஆகும். மார்பில் சூரியன் போல் வட்டமாகத் தோன்றி முதுகுபுறத்தில் சோதி பிரகாசிக்கும்.

பிராணாயாம அப்பியாசத்தின் போது இடை, கழுத்து, தலை, கண் ஆகிய நான்கும் நிமிர்ந்திருக்க வேண்டும்.

தலை முழுகும் விதி

கஸ்தூரி மஞ்சள், வெள்ளை மிளகு, கடுக்காய் தோல், நெல்லி முள்ளி, வேப்பம் பருப்பு வகைக்கு 1/4 பலம் ஆகியனவற்றை நிறுத்தெடுத்து முதல்நாள் இரவில் பசும்பாலில் ஊறப் போட்டு, மறுநாள் காலையில் பசும்பால் விட்டரைத்து சுமார் 1/4 படி பாலிற்கலக்கிக் கொதிக்க வைத்து சேறு பதத்தில் இறக்கி வைத்து சரீரமெங்கும் தேய்த்து 2 மணி நேரம் ஆன பின்பு தண்ணீர் கலக்காத இளவெந்நீரில் தலை முழுக வேண்டும். இதனால் கரப்பான்புண், அக்கினி மந்தம், மலபந்தம், கால்புற்று, காமாலை விஷங்கள், சோனித வாதம், உட்சூடு, சிரங்கு, கரப்பான், சுரம், சன்னி இவைகள் நீங்கும்

Comments

Popular Posts