27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு தாத்திரீஸ்வரர் திருக்கோயில் -[சுவாதி -Swati]
27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு தாத்திரீஸ்வரர் திருக்கோயில் -[சுவாதி -Swati]
ஸ்தல வரலாறு:
படுக்கை ஜடாமுடி சித்தர், பிராணதீபிகா சித்தர் என்ற சித்தர்கள் இங்கு தவம் செய்தனர். அவர்கள் இங்கிருந்த நெல்லிமரத்தடியில் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து, நெல்லியப்பர் என்ற பெயர் சூட்டினர். சமஸ்கிருதத்தில் நெல்லியை தாத்திரி என்பர். எனவே இவர் தாத்திரீஸ்வரர் என்று அழைக்கப் பட்டார். சிறந்த மலர்ச்செடிகளால் மணம் பொருந்திய வனத்தில் சிவன் காட்சி தருவதால் இத்தலத்திற்கு திருமணம் என்ற பெயர் ஏற்பட்டது. சித்தர்கள் வசித்ததால் சித்தர்காடு எனப்பட்ட தலம், சித்துக்காடு என மருவியது. தற்போது இப்பெயரே வழக்கில் உள்ளது.
சிறப்பம்சம்:
சுவாதி எனும் புனித சொல்லில் சிவ, விஷ்ணு ஐக்கிய ஸ்வரூப சக்திகள் நிறைந்துள்ளன. நமசிவாய மந்திரத்தில் வகாரத்தில், சுவாதி என்ற புனிதச் சொல்லும் அடங்கும். அதேபோல் பெருமாளின் அம்சமான சுந்தரராஜர், வாசுதேவர், திரிவிக்ரமன் ஆகிய மூவருக்கும் உரிய பீஜாட்சர சக்திகள் நிறைந்தது சுவாதி என்ற சொல். எனவேதான் சுவாதி நட்சத்திர நாளில் சிவன், விஷ்ணு இருவரும் இணைந்து அருளும் சித்துக்காடு தலத்திற்கு சென்று வழிபடுவது சிறப்பு. சுவாதியில் பிறந்தவர்கள் அந்த நட்சத்திர நாளில் இத்தல குபேரனுக்கு, நெல்லிக்காய்றுகாயுடன், தயிர்சாதம், புளியோதரை படைத்து அதை ஏழைமக்களுக்கு தானம் செய்தால், செல்வம் பெருகி, வாழ்வு சிறக்கும் என்பது ஐதீகம். திருமணத்தடை உள்ளவர்கள் நெல்லியப்பருக்கு, நெல்லிச்சாறு, நெல்லிப்பொடி மற்றும் பால் அபிஷேகம் செய்வித்தும், பூங்குழலி அம்பாளுக்கு பச்சை வஸ்திரம், வளையல் அணிவித்து அர்ச்சனை செய்தும் வழிபடுகிறார்கள்.
ஆயுள்பலம் தரும் சித்தர்:
கோயிலிலுள்ள தூண்களில் சில சித்தர்களின் சிற்பங்கள் உள்ளன. சிவன் சன்னதி எதிரேயுள்ள நந்தி சாந்தமாக காட்சியளிக்கிறது. ஒரு தூணில் படுக்கை ஜடாமுடி சித்தர், நந்தி மண்டப தூணில் பிராண தீபிகா சித்தர் சிற்பங்கள் உள்ளன. தன்னை வழிபடும் பக்தர்களுக்கு பிராணனை (உயிர்) காப்பவராக அருளுவதால் இவருக்கு இப் பெயர் ஏற்பட்டது. ஆயுள்விருத்திக்காக, இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள். இதயநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இவர் முன்பு நெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.
சுவாதி நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:
பெரிய மனிதர்கள் இவர்களிடம் வலிய வந்து பழகுவார்கள். ஆழ்ந்த தூக்கத்தில் கனவு காண் பது இவர்களின் சுபாவம். புத்தி கூர்மையுடனும், எதிலும் முன்யோசனையோடு செயல்படும் இவர்களின் சிறப்பம்சம். சுகபோகங்களை அனுபவிக்கும் யோகம் கொண்டவர்கள். நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து கொள்ளும் இவர்கள், பழகுவதற்கும் இனிமையானவர்கள்.
பிரதான தேவதை[ Pradhana Devatha] : வாயு [Vayu]
அதி தேவதை [Ati Devatha] : வாயு [Vayu]
இருப்பிடம்:
சென்னை பூந்தமல்லியில் இருந்து தண்டுரை என்ற ருக்குச் செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் இத்தலம் உள்ளது. குறித்த நேரத்தில் மட்டுமே பஸ் உண்டு என்பதால், பூந்தமல்லியில் இருந்து வாகனங்களில் சென்று திரும்பலாம்.
திறக்கும் நேரம்: காலை 8 10 மணி, மாலை 5 7 மணி.
போன்: +91- 93643 48700, 93826 84485
Comments
Post a Comment