FKart PrmotionalBanners

27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு கிருபா கூபாரேச்வரர் திருக்கோயில்- [அஸ்தம் -Hastha]

27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு கிருபா கூபாரேச்வரர் திருக்கோயில்- [அஸ்தம் -Hastha]


ஸ்தல வரலாறு : 

சிவபெருமான் இந்த உலகத்தை எப்படி இயக்குகிறார் என்பதை அறிய பார்வதிதேவி விரும்பினாள். இதுபற்றி அவரிடமே கேட்டாள். அப்போது, சிவன் ஒரு திருவிளையாடல் செய்தார். பார்வதி தன்னை மறந்து விளையாட்டாக தனது கண்களை பொத்தும்படி செய்தார். அந்த நொடியில் உலக இயக்கம் நின்று போனது. இதைக்கண்டு அதிர்ந்து போன பார்வதி, தன்னால் நிகழ்ந்த இந்த தவறுக்கு சிவனிடம் மன்னிப்பு கோரினாள். அதற்கு சிவன், உன் கரத்தினால் என் கண்ணைப் பொத்தி இந்த பிரபஞ்சத்தை இருளாக்கினாய்.இப்போது என் கரத்தில் இருந்து தோன்றும் ஹஸ்தாவர்ண ஜோதியில் நான் மறையப்போகிறேன். நீ பசுவாக மாறி இந்த ஜோதி இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து என்னை வந்து சேர்வாய்,என கூறி மறைந்தார். சிவனைக்காணாத பார்வதி, அவரது ஆணைப் படி பசு உருவம் கொண்டு, தன் சகோதரரான திருமாலுடன், சிவஜோதியைத் தேடி பூமியெங்கும் வலம் வந்தாள். பார்வதி மீது கிருபை கொண்டார் சிவன். ஒரு அஸ்த நட்சத்திர நாளில், ஹஸ்தாவர்ண ஜோதி தோன்றியது. இதை கோமளீய ஜோதி என்றும் சொல்வர். பார்வதி மனம் மகிழ்ந்து அந்த ஜோதியுடன் ஐக்கியமானாள். பார்வதிக்கு கிருபை செய்த, இந்த சம்பவத்தின் அடிப்படையில் கோமலில் ஒரு கோயில் எழுப்பப்பட்டது. கிருபை செய்த சிவனுக்கு, கிருபா கூபாரேச்வரர் என்ற பெயர் சூட்டப்பட்டது. அம்பாளுக்கு அன்னபூரணி என பெயர்.

சிறப்பம்சம்: 

கிருபா கூபாரேச்வரர் எத்தகைய தவறுக்கும் மன்னிப்பு தரக்கூடியவர். சித்தர் களும், முனிவர்களும், மகான்களும் அஸ்த நட்சத்திர நாளில் அரூப வடிவில் இத்தல இறைவனை கைகூப்பி வணங்கிய நிலையில் வலம் வருவதாக ஐதீகம். அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், கொழுக்கட்டை, வடை, லட்டு நைவேத்யம் செய்து, கிருபா கூபாரேச்வரரையும், அன்னபூரணியையும் வலம் வந்தால் இனிய வாழ்வைப் பெறலாம். கலக்கமான மனம், பயந்த சுபாவம், தீராத பிரச்னைகள் தீர திங்கள், புதன் கிழமைகளில் இங்கு வழிபாடு செய்யலாம். திருமணத் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் பசு, கன்று தானம் செய்யலாம். பிரகாரத்தில் விநாயகர், முருகன், லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, நந்தி, சண்டிகேஸ்வரர் அருளுகின்றனர்.

அஸ்தம் நட்சத்திரக்காரர்களின் பொதுகுணம்: 

ஆடை, ஆபரணங்களில் பிரியம் கொண்டவர்கள். கல்வியில் ஆர்வம் காட்டுவர். நாட்டியம், சங்கீதம் போன்ற கலைகளில் ரசிகத்தன்மை இருக்கும். வாயாடித்தனமாகவும், விகடமாகவும் பேசும் இயல்பு கொண்டவர்கள். யாரிடமும் தானாக வெளியச் சென்று பழகும் இவர்கள், தாயாரின் மீது அலாதி அன்பு கொண்டிருப்பர்.

பிரதான தேவதை [Pradhana Devatha] : சவிதா[Savitha] 
அதிதேவதை[Atidevatha] : சாஸ்தா[Sastha]  

இருப்பிடம்: 

கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள குத்தாலத்திலிருந்து பிரியும் ரோட்டில் 8 கி.மீ. தூரத்தில் கோமல் உள்ளது.குத்தாலத்திலிருந்து பஸ், ஆட்டோ வசதி உள்ளது.

திறக்கும் நேரம்: காலை 7- மதியம் 12 , மாலை 5.30- இரவு 7.30 மணி

போன்: +91 - 95002 84866.

Comments

Popular Posts