FKart PrmotionalBanners

27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்-[ சித்திரை- Chaitra]

27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்-[ சித்திரை- Chaitra]


ஸ்தல வரலாறு: 

முன்னொரு காலத்தில் நடந்த தேவாசுர போரில், ஏராளமான அசுரர்கள் மாண்டனர். அவர்களை, அசுர குரு சுக்கிராச்சாரியார் ம்ருதசஞ்சீவினி மந்திரம் மூலம் உயிர் பெறச்செய்தார். அந்த மந்திரத்தை கற்றுக்கொள்ள விரும்பிய தேவர்கள், தங்கள் குருவான பிரகஸ்பதியின் (குரு) மகன் கசனை அழைத்து, அசுர குருவிடம் சென்று மருதசஞ்சீவினி மந்திரத்தை உபதேசம் பெற்று வா, என்றார்கள். கசனும் தன் தந்தை வியாழபகவான் ஆசியுடன் அசுரலோகம் சென்றான். அவனை அசுரகுரு சுக்ராச்சாரியாரின் மகள் தேவயானி ஒரு தலையாகக் காதலித்தாள். அவள் மூலமாக சுக்ராச்சாரியாரிடம் இருந்து கசன் மந்திரம் கற்றுக் கொண்டான். இதையறிந்த அசுரர்கள் கசன் உயிரோடு இருந்தால் அசுரர்குலத்திற்கு ஆபத்து வந்துவிடும் என நினைத்து , அவனைக் கொன்று சாம்பலாக்கினர்.

அசுரகுரு அறியாமலேயே அவர் குடிக்கும் பானத்தில் கலக்கி கொடுத்து விட்டனர். கசனைக் காணாத தேவயானி, தன் தந்தையிடம், கசனின் இருப்பிடத்தை கண்டறியும் படி வேண்டினாள். அசுரகுரு தன் ஞான திருஷ்டியால் கசன் தன் வயிற்றில் இருப்பதை அறிந்து, ம்ருதசஞ்சீவினி மந்திரம் மூலம் கசனை உயிர் பெறச் செய்தார். அவரது வயிற்றைக் கிழித்துக் கொண்டு கசன் வெளிவந்ததால், சுக்ராச்சாரியார் இறந்து விட்டார். தன்னைக் காப்பாற்றிய அசுரகுரு இறந்து கிடப்பதைக் கண்டு தான் அவரிடம் கற்ற மந்திரம் மூலம் அவரை உயிர்பெறச் செய்தான். சுக்ராச்சாரியார் தன் மகள் தேவயாணியை மணம் முடித்து செல்ல வேண்டும் என்று கூற, அதற்கு கசன், உங்கள் வயிற்றிலிருந்து மீண்டு வந்துள் ளதால் தேவயானி எனக்கு சகோதரி முறை வேண்டும், என பக்குவமாகக் கூறி தேவலோகம் கிளம்பினான். கடும்கோபம் கொண்ட தேவயானி, கசனை ஏழு மலைகளால் தடுத்து நிறுத்தி அசுரலோகத்திலேயே தங்க வைத்தாள். கசனைக் காணாத பிரகஸ்பதி, மகனை மீட்டுத்தரும்படி இத்தலத்து பெருமாளை வேண்டி தவமிருந்தார். பெருமாள், சககரத்தாழ்வாரை அனுப்பி கசனை மீட்டார். பின்பு பிரகஸ்பதியின் வேண்டுதலுக்கு இணங்கி இங்கேயே எழுந்தருளினார்.

சிறப்பம்சம்: 

குரு பகவானாகிய பிரகஸ்பதிக்கு சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தன்று ஒரு சித்திரத் தேரில் எழுந்தருளி காட்சி தந்தார். எனவே தான் இத்தலம் சித்திரை நட்சத்திரத்திற்குரிய கோயிலாக விளங்குகிறது.இங்குள்ள சித்திர ரத வல்லபபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் சந்தன மரச்சிலையால் ஆன மூர்த்தியாக காட்சி தருவது விசேஷமான அம்சம். கோயிலுக்கு எதிரே குருபகவான், சக்கரத்தாழ்வாருடன் சுயம்பு வடிவில் இருக்கிறார்.

சித்திரை நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: 

தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் இவர்கள், ஊர் சுற்றுவதில் மிகவும் விருப்பம் கொண்டவர்கள். கல்வி கேள்வியில் சிறந்து விளங்குவர். தைரியம் நெஞ்சில் நிறைந்திருக்கும். எதிரியையும் நேசிக்கும் பரந்த உள்ளம் கொண்டவர்கள். பிறருடைய குணம் அறிந்து செயல்பட்டு தனக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்வர்.

பிரதான தேவதை[Pradhana Devatha] : துவஷ்ட[Twashta ]
அதிதேவதை[Atidevatha] : துவஷ்டா[Twashta]  

இருப்பிடம்: 

மதுரையில் இருந்து 23 கி.மீ., தூரத்திலுள்ள குருவித்துறைக்கு மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ் உள்ளது. குருவித்துறையில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. வியாழன், பவுர்ணமி போன்ற கோயில் வரை பஸ்கள் செல்லும். மற்ற நாட்களில் ஆட்டோவில் செல்ல வேண்டும்.

திறக்கும் நேரம்: காலை 7.30 - மதியம் 12 மணி, மாலை 3- 6 மணி.

போன்:+ 91- 94439 61948, 97902 95795

Comments

Popular Posts