FKart PrmotionalBanners

பன்னிரண்டு திருமுறைகள்-தேவாரம், திருவாசகம், திருமந்திரம்


பன்னிரண்டு திருமுறைகள்-தேவாரம், திருவாசகம், திருமந்திரம்

மாசு இல் வீணையும், மாலை மதியமும்,
வீசு தென்றலும், வீங்கு இளவேனிலும்,
மூசு வண்டு அறை பொய்கையும், போன்றதே---
ஈசன், எந்தை, இணைஅடி நீழலே.

நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்;
நமச்சிவாயவே நான் அறி விச்சையும்;
நமச்சிவாயவே நா நவின்று ஏத்துமே;
நமச்சிவாயவே நன்நெறி காட்டுமே.

ஆள் ஆகார்; ஆள்ஆனாரை அடைந்து உய்யார்;
மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்;
தோளாத(ச்) சுரையோ, தொழும்பர் செவி?
வாளா மாய்ந்து மண்ஆகிக் கழிவரே!

நடலை வாழ்வுகொண்டு என் செய்திர்? நாண்இலீர்?
சுடலை சேர்வது சொல் பிரமாணமே;
கடலின் நஞ்சு அமுதுஉண்டவர் கைவிட்டால்,
உடலினார் கிடந்து ஊர் முனி பண்டமே!

பூக் கைக் கொண்டு அரன் பொன்அடி போற்றிலார்;
நாக்கைக்கொண்டு அரன் நாமம் நவில்கிலார்;
ஆக்கைக்கே இரை தேடி, அலமந்து,
காக்கைக்கே இரை ஆகி, கழிவரே!

குறிகளும்(ம்), அடையாளமும், கோயிலும்,
நெறிகளும்(ம்), அவர் நின்றது ஓர் நேர்மையும்,
அறிய ஆயிரம்ஆரணம் ஓதிலும்,
பொறிஇலீர்! மனம் என்கொல், புகாததே?

வாழ்த்த வாயும், நினைக்க மட நெஞ்சும்,
தாழ்த்தச் சென்னியும், தந்த தலைவனைச்
சூழ்த்த மா மலர் தூவித் துதியாதே
வீழ்த்தவா, வினையேன் நெடுங் காலமே!

எழுது பாவைநல்லார் திறம் விட்டு, நான்,
தொழுது போற்றி, நின்றேனையும் சூழ்ந்துகொண்டு,
உழுத சால்வழியே உழுவான்பொருட்டு
இழுதைநெஞ்சம்இது என் படுகின்றதே!

நெக்குநெக்கு நினைபவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும் பொன் ஆர் சடைப் புண்ணியன்,
பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு
நக்கு நிற்பவர், அவர்தம்மை நாணியே.

விறகில்-தீயினன், பாலில் படு நெய் போல்
மறைய நின்றுளன்---மா மணிச்சோதியான்;
உறவுகோல் நட்டு, உணர்வுகயிற்றினால்
முறுக வாங்கிக் கடைய, முன் நிற்குமே.

Comments