FKart PrmotionalBanners

தன்னையே தானீந்தாலும் தீருமோ தாயின்கடன்

தாயென்னும் தவவடிவம் முற்றும் துறந்த முனிவர்களாலும் துறக்க முடியாததோர் உறவு. ஆதிசங்கரரைப் பற்றிப் பேசப்போந்த எழுத்தாளர் அமரர் தேவன், அவர் தன் தாயாரின் இறுதிக் காலம் நெருங்குவதை உணர்ந்து கண்ணீர் உகுப்பதை உருக்கமாக வர்ணிக்கிறார். முற்றும் துறந்த துறவியான அவர் ஏன் கண்ணீர் உகுக்கிறார் என அவர் சிஷ்யர்கள் அவரை வினவ அவர் காரணத்தை விளக்கி, முன்னதாக ஸ்ரீகிருஷ்ணரை தன் தாயாரிடம் சென்று ஆறுதல்படுத்தக் கேட்டுக் கொள்வதாகவும், அப்படியே சென்ற ஸ்ரீகிருஷ்ணரிடம் ஆர்யாம்பாள், “சங்கரா! வந்து விட்டாயா?” என வினவ, அவர் “சங்கரன் கேட்டுக் கொண்டதால் ஓடி வந்திருக்கும் ஸ்ரீகிருஷ்ணன் நான்” என பதில் கூற “பகவானையே அனுப்பும் அளவுக்கு என் சங்கரன் அவ்வளவு பெரியவனாகி விட்டானா?” என வியப்பதாகவும் பின் சங்கரரே அங்கு வருவதாகவும் வர்ணிக்கிறார். துறவியான ஆதிசங்கரரால் கூடத் துறக்கமுடியாத பந்தம் தாய் என்னும் உறவு. ஊரே எதிர்த்தாலும், விறகுதர மறுத்தாலும், இவர் வீட்டின் புழக்கடையில் பச்சை வாழை மரத்தைத் தன் தவவலிமையால் கொழுந்து விட்டெரியச் செய்து தாயின் உடலை தகனம் செய்தார்.

மற்றொரு துறவியான ஸ்ரீபட்டினத்தாரோ தன் தாய் இறந்ததும் கதறிப் புலம்பி ஒரு பதிகமே இயற்றினார். கல்லையும் கரையச் செய்யும் அந்த வரிகளை நாமும் காண்போம்.

ஐயிரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச்-செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி?

முந்தித்தவம் கிடந்து முந்நூறுநாள் சுமந்தே
அந்திபகலாச் சிவனை ஆதரித்துத்-தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்?

வட்டிலிலும், தொட்டிலும், மார்மேலும், தோள்மேலும்,
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து-முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ
விறகிலிட்டுத் தீ மூட்டுவேன்?

நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே-அந்திபகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றும் தாய்தனக்கோ
மெய்யிலே தீ மூட்டுவேன்?

அரிசியோ நான் இடுவேன் ஆத்தாள் தனக்கு?
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல்-உருசியுள்ள
தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ
மானே! என அழைத்த வாய்க்கு?

அள்ளி இடுவது அரிசியோ? தாய் தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ? கூசாமல் மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே! என அழைத்த வாய்க்கு?

முன்னை இட்ட தீ முப்புரத்திலே;
பின்னை இட்ட தீ தென் இலங்கையில்;
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே;
யானும் இட்ட தீ மூள்க! மூள்கவே!

வேகுதே தீயதனில்; வெந்து பொடி சாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ!-மாகக்
குருவிபறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை.

வெந்தாளோ சோணகிரி வித்தகா! நின்பதத்தில்
வந்தாளோ! என்னை மறந்தாளோ-சந்ததமும்
உன்னையேநோக்கி உகந்துவரம் கிடந்துஎன்
தன்னையே ஈன்றெடுத்த தாய்?

வீற்றிருந்தாள் அன்னை; வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள்; இன்று வெந்து நீறானாள்; பால் தெளிக்க
எல்லாரும் வாருங்கள்! ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்!
எல்லாம் துறந்ததொரு பராபரத்தில் லயித்த துறவியான பட்டினத்தாரையே இவ்வாறு கதறியழச் செய்த உறவு தாயினுடையது. எத்துணை மேன்மையான உறவு அது! அந்தத் தாயின் தவத்திற்கு, தியாகத்திற்கு நாம் கொடுக்கக்கூடிய கைம்மாறு எதுவாக இருக்க முடியும்? நம்மையே நாம் ஈந்தாலும் தீருமோ அந்தக் கடன்?

Comments

Popular Posts