FKart PrmotionalBanners

மாயமாய் மறையும் தீவுகள்!

மாயமாய் மறையும் தீவுகள்!

ஜி.எஸ்.எஸ்


பிற நாடுகள் சிலவற்றில் அந்த விபரீதம் நடந்தபோது பரிதாபப்பட்டுக் கொண்டிருந்தோம். ‘சிட்டிஸன்’ படத்தில் அத்திப்பட்டி என்ற கிராமமே இந்திய வரை படத்திலிருந்து மறைந்ததைக் கண்டபோது ‘சுவாரஸ்யமான சினிமாக்கதை’ என்று கருதினோம். எல்லாமே உண்மையாகி வருகிறது. தீவுகள் மறைந்து கொண்டு வருகின்றன.

மால்டீவ்ஸ் எனப்படும் மாலத்தீவுகளின் அருகே உள்ள கடலின் மட்டம் உயர்ந்து கொண்டே வருவதால் 2100ல் அந்த நாட்டுக்குப் பெரும் பாதிப்பு உண்டாக வாய்ப்புண்டு. சொல்லப்போனால் அந்த நாடே இல்லாமல் போய்விடும் அபாயமும் எழுந்திருக்கிறது. எனவே அந்தத் தீவுகளின் அதிபர், இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா என்று பல நாடுகளில் நிலம் வாங்கிப் போடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

இதற்கு ஒரு முன்னோட்டம் மாதிரி தமிழகத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்பு தாக்கிய சுனாமி மாலத்தீவுகளை மேலும் அதிகமாகவே தாக்கியிருக்கிறது.

சென்ற அக்டோபர் மாதத்தில், உலக வெப்பமயமாக்கலால் தன்னைப் போன்ற நாடுகளுக்கு ஏற்பட்டிருக்கும் அபாயத்தை உணர்த்தும் வகையில், ‘உலகின் முதல் கடலுக்குக் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட அமைச்சரவை’ மாலத்தீவுகளில் நடத்தப்பட்டது.

பசிபிக் கடலின் நடுப்பகுதியில் அமைந்த தீவு நாடு தூவாலு. ‘அந்தத் தீவு விரைவில் மூழ்கிவிடும்’ என்று கூறுகின்றன சில ஆராய்ச்சிகள். அலைகள் மேலும் உயரமாக அந்த நாட்டின் கரையை மோதிக் கொண்டிருக்கின்றன. கடற்கரைப் பரப்பு குறைந்து கொண்டே வருகிறது.


தேசத்தையே கடல் காவு வாங்கும் நாள் அதிகமில்லை. தூவாலுவைச் சேர்ந்த பலரும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்குக் குடிபெயர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சில மாதங்களுக்குமுன் வெளியான ‘வாமன தேசங்கள்’ தொடரில் இவற்றைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தோம். நேயர்கள் அந்த நாடுகளுக்காக வருத்தப்பட்டார்கள். ஆனால் அந்த சோகம் அங்கே சுற்றி இங்கே சுற்றி இந்தியாவின் தலையிலேயே விடிந்திருக்கிறது. உலக வெப்ப மயமாக்கலின் விளைவு!

ஏதோ மந்திரவாதியின் வித்தை போல, சூனியக்காரியின் சாபம்போல இந்தியாவின் சில தீவுகள் மாயமாய் மறைந்துவிட்டன.

மன்னார் வளைகுடாவிலுள்ள இரண்டு தீவுகள் கடந்த சில மாதங்களில் காணாமல் போய்விட்டிருக்கின்றன. அவை பூமரிச்சான் மற்றும் விலங்குசல்லி ஆகிய தீவுகள். பவழத்தீவுகளில் நடைபெற்ற அளவுக்கதிகமான சுரங்க செயல்பாடுகள் இதற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் சுற்றுச் சூழல் விஞ்ஞானிகளின் கருத்து உலக வெப்பமயமாக்கலின் விபரீத விளைவுதான் இது என்பதாக இருக்கிறது. ஆக, இனி இந்திய வரைபடத்தில் சில புள்ளி நிலப் பகுதிகள் இடம்பெறாது.


மன்னார் உயிரிவெளி (biosphere) பகுதியை நான்காகப் பிரித்திருக்கிறார்கள். இவை தூத்துக்குடி, வேம்பார், கீழக்கரை, மண்டபம். மறைந்த பூமரிச்சான் தீவு மண்டபம் பகுதியைச் சேர்ந் தது. விலாங்குசல்லி தூத்துக்குடியைச் சேர்ந்தது. கடல் மட்டம் உயர்ந்து இந்தத் தீவுகளை காவு கொண்டிருக்கிறது. பவளத்திட்டுகள் ஒரு தடுப்புச்சுவர் போலச் செயல்பட்டு விசையுடன் வரும் அலைகளால் தீவுகள் அரிக்கப்படாமல் பாதுகாக்கின்றன. அந்தத் திட்டுகள், சுரண்டப்பட்டு அரிக்கப்படும் போது அரண் போலப் பாதுகாக்கும் தீவுகள் பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாத ஒன்று.

பவளத்திட்டுகளையும் சதுப்புநிலக் காடுகளையும் (Mangrove forests) பாதுகாக்கும் விதத்தில் அந்தப் பகுதிக்குள் நுழையத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை பெயரளவில்தான். மீனவர்களும் சுற்றுலாப் பயணிகளும் இரு வேறு காரணங்களுக்காக இந்தத் தடையை தினமுமே மீறிக்கொண்டிருக்கிறார்கள்.


2006 டிசம்பரிலேயே எச்சரிக்கை மணி ஒன்று இந்தியாவில் ஏற்கெனவே ஒலித்தது. முதன் முறையாக மக்கள் வாழும் தீவு ஒன்று மறைந்தது. கங்கையும் பிரம்மபுத்திராவும் பாயும் பகுதியான சுந்தரவனக் காடுகளில் தேமே என்று இருந்தது லோஹசரா தீவு. ஆம், இருந்தது. இப்போது இல்லை.

இது ஆழிசூழ் உலகு. கடலைச் சீற்றம் கொள்ள வைத்தால் நிலத்துக்குப் பெரும் ஆபத்து. சுனாமியின் சீற்றத்தை நாம் அறிவோம். சுனாமி அலை விபரீதத்தை ஏற்படுத்தி விட்டு மீண்டும் கடலுக்குள் சென்று விடும். தீவுகளைக் கபளீகரம் செய்யும் கடல்கள்? ஒரு கண் கெட்டு விட்டது. இப்போதாவது சூரிய நமஸ்காரம் செய்வோமா?

Comments